சந்திரபாபு நாயுடு பேச்சால் சர்ச்சை: கொரோனாவை விட வீரியமிக்க என்440 கே வைரஸ் பரவுகிறது: தொற்றுநோய் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குபதிவு

திருமலை: கொரோனாவை விட 15 மடங்கு வரை வீரியம் கொண்ட (என்440கே) வைரஸ் வேகமாக பரவுவதாக பேசிய தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு மீது தேசிய பேரிடர் நோய் தொற்று மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. ஆந்திர மாநில எதிர்கட்சி தலைவரும், தெலுங்கு தேச கட்சியின் தேசிய தலைவருமான சந்திரபாபு நாயுடு கடந்த சில தினங்களுக்கு முன் ஆந்திர மாநிலம் கர்னூல் மாவட்டத்தில் ‘‘கொரோனா வைரசை விட 10 முதல் 15 மடங்கு வீரியம் கொண்ட  என்.440.கே வகை புதிய வைரஸ் அதிவேகமாக பரவி வருகிறது. இதனால் தற்போது உள்ளதைக் காட்டிலும் அதிக அளவு உயிரிழப்பு ஏற்படக்கூடும்’’ என தெரிவித்தார். சந்திரபாபு நாயுடு பேசிய இந்த வீடியோ சமூக வலைத்தளங்களிலும் பல்வேறு தொலைக்காட்சிகளிலும் செய்திகளாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.  சந்திரபாபு நாயுடுவின் இந்த சர்ச்சை பேச்சால் மக்கள் மத்தியில் பெரும் பதற்றம் மற்றும் பீதி ஏற்பட்டுள்ளதாகவும், மக்கள் மத்தியில் வீண் வதந்திகளை பரப்பி தேவையற்ற  அச்சத்தை ஏற்படுத்துவதாக போலீசார் தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து கர்னூல் மாவட்ட எஸ்பி பக்கீரப்பா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘என்.440 கே வைரஸ் என்ற ஒன்று இல்லை என மாநில அரசும், மத்திய பையோடெக் துறை செயலாளர் அலுவலகமும் தெரிவித்துள்ளது. ஆனால் எதிர்கட்சி தலைவர் சந்திரபாபு மக்களிடம் தேவையில்லாத பீதியை ஏற்படுத்தி அச்சமடையும்  விதமாக வீண் வதந்திகளை பரப்பி வருகிறார். கொரோனா வைரஸ் குறித்து தேவையற்ற வதந்திகளை பரப்புவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். அதன்படி, சந்திரபாபு நாயுடு மீது தேசிய பேரிடர் நோய் ெதாற்று மேலாண்மை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான நோட்டீஸ் முதலாவது நகர காவல்நிலைய இன்ஸ்பெக்டர் தலைமையில் ஐதராபாத்தில் உள்ள சந்திரபாபு நாயுடு வீட்டிற்கு சென்று வழங்கப்பட்டுள்ளது’ என்றார்.

Related Stories: