×

ரசிகர்கள் பங்கேற்புடன் ஐபிஎல் தொடரை இங்கிலாந்தில் நடத்தலாம்: பீட்டர்சன் புது ஐடியா

மும்பை: இந்தியாவில் ஒத்திவைக்கப்பட்டுள்ள ஐபிஎல் தொடரை மீண்டும் ரசிகர்கள் பங்கேற்புடன் இங்கிலாந்தில் நடத்தலாம் என்று கெவின் பீட்டர்சன் கூறி உள்ளார். 14வது ஐபிஎல் தொடர், கொரோனா பரவல் அதிகரித்தன் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளது. இதுவரை 29 லீக் ஆட்டங்கள் நிறைவடைந்துள்ள நிலையில் மீதம் 31 போட்டிகள் தடைபட்டுள்ளன. ஐபிஎல் தொடர் பாதியில் நிறுத்தப்பட்டதால் பிசிசிஐக்கு ரூ.2,200 கோடி வரை நஷ்டம் ஏற்படும் எனக்கூறப்படுகிறது. எனவே மீதமுள்ள போட்டிகளை இந்தாண்டு இந்தியாவில் நடைபெறும் டி20 உலகக்கோப்பைக்கு முன்னதாக நடத்தப்படும் என தகவல் வெளியாகி வருகிறது.

அதாவது செப்டம்பர் மாதத்தில் நடத்த திட்டமிடப்படுகிறது. ஆனால் இந்தியா தற்போது உள்ள சூழலில் உலகக்கோப்பை தொடரே இங்கு நடக்குமா என்ற சந்தேகம் உள்ளது. ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்துவது முதல் தேர்வாக உள்ளது. அங்கு கடந்தாண்டே வெற்றிகரமாக போட்டிகள் நடத்தப்பட்டன. ஆனால் அங்கு செப்டம்பர் மாதத்தில் கடும் வெயில் நிலவும். அக்டோபர் மாதத்தில்தான் சற்று வெயில் குறையும் என கூறப்படுகிறது. அக்டோபரில் டி20 உலகக்கோப்பை நடைபெறவுள்ளது. இதனால் அமீரகம் சரியான தேர்வாக இருக்குமா என்ற குழப்பம் நீடிக்கிறது.

இந்நிலையில் கெவின் பீட்டர்சன் கூறியதாவது, ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என பேச்சுக்கள் உள்ளன. அனால் என்னை பொறுத்தவரை மீதமுள்ள போட்டிகள் இங்கிலாந்தில் நடத்துவதே சரியாக இருக்கும். இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி செப்.14வரை அங்கு விளையாடுகிறது. எனவே செப்டம்பர் மாத இடையில் இருந்து அக்டோபர் இடையில் வரை இங்கிலாந்தில் மைதானங்கள் ரெடியாக இருக்கும். அங்கு இந்திய வீரர்களும் இருக்கின்றனர், அதே போல இங்கிலாந்தின் சிறந்த வீரர்களும் இருக்கின்றனர். செப் - அக்டோபர் மாதங்களுக்கு இடையே இங்கிலாந்தின் கால நிலை மிகச் சிறப்பாக இருக்கும்.

ஐபிஎல் தொடருக்காக மான்செஸ்டர், லீட்ஸ், பிர்மிங்கம், லண்டனில் உள்ள 2 மைதானங்களை பிசிசிஐ பயன்படுத்திக்கொள்ளலாம். அங்கு ரசிகர்களின் பங்கேற்புடனும் நடத்த பெரிய அளவில் வாய்ப்புகள் இருக்கும் என தெரிவித்துள்ளார்.

Tags : IPL ,England ,Peterson , Fans can host IPL series in England: Peterson New Idea
× RELATED ஐபிஎல் 2024: லக்னோ அணிக்கு 177 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது சென்னை அணி