×

மாட்ரிட் ஓபன் டென்னிஸ்: பைனலில் நம்பர் ஒன் ஆஷ்லே பார்டியை வீழ்த்தி சபலென்கா சாம்பியன்

* ஆடவர் பிரிவில் டொமினிக் தீமை வீழ்த்தி ஸ்வரெவ் இறுதி போட்டிக்கு தகுதி

மாட்ரிட்: மாட்ரிட் ஓபன் டென்னிஸ் மகளிர் ஒற்றையர் பிரிவு பைனலில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஸ்லே பார்டியை வீழ்த்தி ஆர்யனா சபலென்கா சாம்பியன் பட்டம் பெற்றார். இதுபோல் ஆண்களுக்கான செமி பைனலில்   டொமினிக் தீமை வீழ்த்தி, அலெக்சாண்டர் ஸ்வரெவ் பைனலுக்கு முன்னேறியுள்ளார். இன்று நடைபெறும் பைனலில் அவர் பெரட்டினியுடன் மோதுகிறார். நேற்று நடந்த முதலாவது செமி பைனலில் ஜெர்மனியின் வளர்ந்து வரும் டென்னிஸ் நட்சத்திரமான அலெக்சாண்டர் ஸ்வரெவும், ஆஸ்திரிய வீரர் டொமினிக் தீமும் மோதினர். கடந்த 2020ல் யு.எஸ்.ஒபன் கிராண்ட்ஸ்லாமில், டொமினிக் தீமை எதிர்த்து, 5 செட்களில் கடுமையாக போராடி, தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த தோல்விக்கு பழி வாங்கும் விதமாக ஸ்வரெவ், இப்போட்டியில் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தினார். துல்லியமான சர்வீஸ்களின் மூலம் டொமினிக் தீமை திணறடித்த அவர், அதே வேளையில், தீமின் சர்வீஸ்களை எளிதாக எதிர்கொண்டார். பிளேஸ்மென்ட்களில் கவனம் செலுத்திய ஸ்வரெவ், முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். 2வது செட்டில் நிச்சயம் டொமினிக் தீம் எழுச்சி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் எதிர்ப்பே இல்லாமல் அந்த செட்டிலும் தீம் சரணடைந்து விட்டார் என்றே சொல்ல வேண்டும். இதனால் 6-4 என்ற கணக்கில் 2வது செட்டை கைப்பற்ற, நேர் செட்களில் இப்போட்டியில் ஸ்வரெவ் வெற்றி பெற்றார்.

இந்த வெற்றியின் மூலம் 2021 மாட்ரிட் ஓபன் ஆடவர் ஒற்றையர் இறுதிப்போட்டிக்கு அவர் முன்னேறினார். இன்று நடைபெறும் பைனலில் அவர் இத்தாலி வீரர் மாட்டியோ பெரட்டினியை எதிர்கொள்கிறார். நேற்று நடந்த 2வது செமி பைனலில் நார்வேயின் இளம் வீரர் காஸ்பர் ரூடுடன், பெரட்டினி மோதினார். அதில் 6-4, 6-4 என நேர் செட்களில் காஸ்பர் ரூடை வீழ்த்தி, பெரட்டினி பைனலுக்கு முன்னேறியுள்ளார். இதுபோல் மாட்ரிட் ஓபன் டென்னிஸ் தொடர் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த இறுதிபோட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான 25 வயது ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே பார்டி 5ம் நிலை வீராங்கனையான பெலாரசின் 23வயது ஆர்யனா சபலென்காவுடன் மோதினார்.

இதில் முதல் செட்டை 0-6 என பார்டியை ஒருபுள்ளிகூட எடுக்கவிடாமல் சபலென்கா கைப்பற்றி அதிர்ச்சி கொடுத்தார். 2வது செட்டில் சுதாரித்துக்கொண்டு ஆடிய பார்டி 6-3 என கைப்பற்றி பதிலடி கொடுத்தார். வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டில் ஆதிக்கம் செலுத்திய ஆர்யானா 6-4 என கைப்பற்றினார். முடிவில் 6-0,3-6,6-4 என பார்டியை வீழ்த்தி சபலென்கா சாம்பியன் பட்டம் வென்றார். 2018ம் ஆண்டுக்கு பின் இருவரும் மோதிய 8 போட்டிகளில் தலா 4 வெற்றியை  பெற்றுள்ளனர். மேலும் அண்மையில் ஜெர்மனி ஸ்டட்கர்ட் ஓபன் பைனலில் பார்டியிடம் அடைந்த தோல்விக்கு சபலென்கா பழிதீ–்ர்த்துக்கொண்டார்.

Tags : Madrid Open Tennis ,Sabalenka ,Ashley Party , Madrid Open Tennis: Sabalenka defeats number one Ashley Party in final
× RELATED சில்லி பாயின்ட்…