×

கொரோனா பேரிடர் காலத்தில் விமர்சனங்களை ஒடுக்குவதற்கு மோடி அரசு முயற்சிப்பது மன்னிக்க முடியாத செயல்: சர்வதேச இதழான லான்செட் கடும் விமர்சனம்

டெல்லி: கொரோனா பேரிடர் காலத்தில் விமர்சனங்களை ஒடுக்குவதற்கு மோடி அரசு முயற்சிப்பது மன்னிக்க முடியாத செயல் என்று சர்வதேச இதழான லான்செட் கடுமையாக விமர்சனம் செய்துள்ளது. லான்செட் இதழின் விமர்சனத்தை அடுத்து நாட்டு மக்களிடம் மோடி அரசு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். இந்தியாவின் தற்போதைய கொரோனா நிலவரம் குறித்து உலகின் பழமையான மற்றும் புகழ்பெற்ற மருத்துவ வார இதழ்களில் ஒன்றான லான்செட் தலையங்கம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்பு எண்ணிக்கைகள் குறைத்து கட்டப்படுவதாக நிபுணர்கள் நம்புவதாக லான்செட் கூறியுள்ளது. மருத்துவமனைகள் அனைத்தும் நிரம்பிவிட்டன.

நோயாளிகள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதால் மருத்துவ பணியாளர்கள் திணறுகின்றனர். மருத்துவ பணியாளர்களும் அடுத்தடுத்து தொற்றுக்கு ஆளாகுகின்றனர். ஆக்சிஜன், படுக்கை, மருந்துகளுக்காக சமூக வலைத்தளங்களில் மக்கள் மன்றாடுகின்றனர் என்று இந்திய கொரோனா நிலவரத்தை லான்செட் விவரித்துள்ளது. கொரோனா 2-வது அலை தொடங்குவதற்கு முன்பே கொரோனாவை ஒழித்துவிட்டதாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் அறிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள லான்செட்; 2-வது அலை மோசமாக இருக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்ததை இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று நிபுணர்கள் எச்சரித்ததை இந்திய அரசு கண்டுகொள்ளவில்லை என்று குறிப்பிட்டுள்ளது.

மக்களிடம் மந்தை நோய் எதிர்ப்பு உருவாகிவிட்டதாக மத்திய அரசு வெளியிட்ட தவறான தகவல்கள் 2-வது அலையை எதிர்கொள்வதற்கான ஆயத்த பணிகளில் தொய்வை ஏற்படுத்தி விட்டதாகவும், அந்த இதழ் விமர்சித்துள்ளது. வரும் ஆகஸ்ட் 1-ம் தேதிக்குள் இந்தியாவில் கொரோனா உயிரிழப்பு 10 லட்சத்தை எட்டும் என்றும் வாஷிங்டன் பல்கலைக்கழக ஆய்வு மையம் மதிப்பிட்டு இருப்பதை சுட்டிக் காட்டியுள்ள லான்செட் அப்படி உயிரிழப்பு ஏற்பட்டால் இந்தியாவில் பேரழிவு ஏற்பட்ட காரணமாக இருந்த மோடி அரசே முழு பொறுப்பு என்று தெரிவித்துள்ளது. பேரிடர் காலத்திலும், அரசுக்கு எதிரான விமர்சனங்களையும், வெளிப்படையான விவாதங்களையும் ஒடுக்க நினைக்கும் மோடி அரசின் செயல் மன்னிக்க முடியாதது என்றும் லான்செட் இதழ் கடுமையாக விமர்சித்துள்ளது. தவறுகளுக்கு பொறுப்பேற்பதுடன் பொறுப்புள்ள தலைமையாக மோடி அரசு செயல்பட்டால் மட்டுமே கொரோனா தடுப்பில் வெற்றி பெற முடியும் என்றும் அந்த இதழ் கூறியுள்ளது.

ப.சிதம்பரம் ட்வீட்
பிரபல மருத்துவ இதழான லான்செட் இதழின் கருத்துக்களை உணர்ந்து நாட்டு மக்களிடம் மோடி அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ப.சிதம்பரம் வலியுறுத்தியுள்ளார். மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் பதவி விலகுவதுடன் கொரோனா தடுப்பு தொடர்பான முக்கிய முடிவுகளை பிரதமர் தலைமையிலான உயர்மட்ட குழுவே எடுக்க வேண்டும் என்றும் ப.சிதம்பரம் கேட்டுக்கொண்டுள்ளார்.


Tags : Modi government ,Corona disaster , Modi government's attempt to suppress criticism during the Corona disaster is an unforgivable act: Lancet, an international magazine
× RELATED ஈரான் – இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம்;...