சென்னை தலைமை அலுவலகம், புதுக்கோட்டை பகுதியில் சசிகலாவை ஆதரித்து அதிமுக போஸ்டர்

புதுக்கோட்டை: சென்னை தலைமை அலுவலகம் எதிரே மற்றும் புதுக்கோட்டை பகுதியில் அதிமுக சார்பில் சசிகலாவை ஆதரித்து ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுகவில் எதிர்கட்சித்தலைவர் பதவிக்கு கடும் போட்டி நிலவுகிறது. ஓபிஎஸ் தலைமையில் ஒரு கோஷ்டியும், எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஒரு கோஷ்டியும் மோதி வருகின்றனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி சென்ற காரை வழிமறித்து ஓபிஎஸ் தொண்டர்கள் கோஷமிட்டது பரபரப்பாக பேசப்பட்டது. இதையடுத்து அதிமுக நிர்வாகிகள் நடத்திய கூட்டத்திலும் எந்தவொரு முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த விவகாரத்தில் சசிகலா பின்னால் இருந்து ஓபிஎஸ்ஸை வழி நடத்துவதாக தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்தநிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவகலம் எதிரே சசிகலாவை ஆதரித்து போஸ்டர்கள் ஒட்டப்பட் டிருந்தன. அதேபோல புதுக்கோட்டை பகுதியிலும் அதிமுக தொண்டர்கள் சார்பில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், ‘‘எம்ஜிஆர் உருவாக்கிய, ஜெயலலிதா கட்டிக்காத்த கட்சியை காத்திட சசிகலா தலைமையில் ஒன்றிணைவோம்’’ எனும் வாசகங்கள் இடம்பெற்றிருந்தன. அதிமுகவில் இன்னும் எதிர்கட்சி தலைவர் முடிவாகாத நிலையில் இப்படி போஸ்டர் ஒட்டப்பட்டிருப்பது அதிமுகவினரிடையே பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: