கொரோனாவை கட்டுப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசனை: முதல் அமைச்சரவை கூட்டத்தில் எடுக்கப்பட்ட 6 முடிவுகள்!

சென்னை: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் 6 முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. தமிழக முதல்வராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் பதவி ஏற்றார். தற்போது தமிழகத்தில் கொரோனா கட்டுக்கடங்காமல் பரவி வருவதால் அதை கட்டுப்படுத்த, முதல்வர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் நிலவியது. பதவி ஏற்ற முதல் நாளிலேயே அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன், வீடியோ கான்பரன்சில் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். அப்போது கலெக்டர்கள் தெரிவித்த கருத்துக்களின் அடிப்படையில் தமிழகம் முழுவவதும் நாளை முதல் 2 வாரத்துக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் வாக்குறுதியாக அரிசி குடும்ப அட்டை வைத்துள்ள அனைத்து குடும்பத்தினருக்கும் ரூ.4000 வழங்கப்படும், இந்த திட்டம் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாளான ஜூன் 3ல் செயல்படுத்தப்படும் என்று ஏற்கனவே மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார்.

ஆனால், நாளை தொடங்கி முழு ஊரடங்கில் மக்கள் இருக்க இருப்பதால் அவர்களின் நலனுக்காக, முதல் தவணையாக ரூ.2,000 நாளை முதல் ரேஷன் கடைகளில் வழங்கப்பட உள்ளது. தமிழகத்துக்கு தினமும் 440 மெட்ரிக் டன் அளவுக்கு ஆக்சிஜன் தேவைப்படுகிறது. ஆனால் இப்போது 220 மெட்ரி–்க் டன் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. எனவே 440 மெட்ரிக் டன் அளவுக்கு தமிழகத்துக்கு உடனடியாக ஒதுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இருந்தார். முதல்வரின் கோரிக்கையை ஏற்று, தமிழகத்துக்கு ஆக்சிஜன் ஒதுக்கீட்டை 419 டன்னாக அதிகரித்து மத்திய அரசு நேற்று உத்தரவிட்டுள்ளது. முதல்வர் கடிதம் எழுதிய ஒரே நாளில், அவரது கோரிக்கையை மத்திய அரசு நிறைவேற்றி உள்ளது. பதவி ஏற்ற உடனேயே சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் உள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.

அதேபோல் சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் உள்ள ஆக்சிஜன் பிளான்ட்டை ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், வரும் 15ம் தேதிக்குள் கூடுதலாக 12,500 ஆக்சிஜன் படுக்கைகள் தயார் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். இதுதவிர முதல்வராக பதவி ஏற்கும் முன்பே தலைமை செயலாளர், சுகாதாரத்துறை செயலாளர்களுடன் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அவரது வீட்டில் ஆலோசனை நடத்தினர். இதன் தொடர்ச்சியாக, 1212 ஒப்பந்த நர்சுகளை பணி நிரந்தரம் செய்ய ஸ்டாலின் ஆலோசனை வழங்கியதன் பேரில் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்பட்டனர். மேலும் பத்திரிகையாளர்கள், ஊடகத்தினர்களையும் முன் களப்பணியாளர்களாக அறிவித்தார்.

இப்படி கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வர முதல்வர் மு.க.ஸ்டாலின் பல நடவடிக்கைகளை எடுத்து வரும் நிலையில், புதிய அரசு பொறுப்பேற்ற பின் இன்று(9ம் தேதி) முதன்முறையாக அமைச்சரவை கூட்டம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்தது.

காலை 11.30 மணியளவில் தலைமை செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் இந்த கூட்டம் நடந்தது. இதில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, ஐ.பெரியசாமி, பொன்முடி, ரகுபதி, செந்தில் பாலாஜி, அன்பில் மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்ட அமைச்சர்கள், தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் கொரோனாவை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை, ஆக்சிஜன் படுக்கைகளை தேவையான அளவுக்கு ஏற்பாடு செய்வது, தமிழகத்தில் உள்ள உற்பத்தி மையங்களில் ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க எடுக்க வேண்டிய நடவடிக்கை, 2 டோஸ் தடுப்பூசிகளும் மக்களுக்கு தட்டுப்பாடு இன்றி கிடைக்க நடவடிக்கை எடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அமைச்சரவை கூட்டத்தில் 6 முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் ஆக்சிஜன் கையிருப்பை உறுதி செய்ய வேண்டும்.

அரசு, தனியார் நிறுவனங்கள் மூலம் ஆக்சிஜன் உற்பத்தியை தொடங்க ஊக்குவிக்கப்படும்.

மருத்துவ ஆக்சிஜன் முறையாகப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்

எக்காரணம் கொண்டும் மருத்துவ ஆக்சிஜன் வீணாக அனுமதிக்கக் கூடாது.

ஊரடங்கை முழுமையாக அமல்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

அனைத்து மாவட்டங்களிலும் ரெம்டிசிவிர் மருந்து தட்டுப்பாடு இன்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.

Related Stories:

>