×

எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக இபிஎஸ்-ஓபிஎஸ் மோதல்: பின்னால் இருந்து இயக்குவது சசிகலா?: பரபரப்பு தகவல்கள்

சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்காக இபிஎஸ்-ஓபிஎஸ் மோதலில் பின்னால் இருந்து இயக்குவது சசிகலா என்ற தகவல்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக படுதோல்வியை சந்தித்தது. வெறும் 65 தொகுதிகளையே பிடிக்க முடிந்தது. தேர்தலுக்கு முன்னர் தனக்கென்று தேர்தல் ஆலோசகர்களை எடப்பாடி பழனிசாமி நியமித்தார். இந்த ஆலோசகர்கள், எடப்பாடி  பழனிசாமியை முன்னிறுத்துவதையே முக்கியமாக கொண்டனர். தேர்தல் பணிகளில் ஈடுபாடு காட்டவில்லை. இதனால்தான் ஓ.பன்னீர்செல்வத்தை, முதல்வர் பதவிக்கு போட்டியிடும் பட்டியலில் இருந்து ஓரங்கட்ட முடிந்தது. ஆனால் தேர்தலில்  கணிசமான இடங்களைப் பிடிக்க முடியவில்லை.

இந்தநிலையில், எதிர்க்கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான எம்எல்ஏக்கள் கூட்டம் அதிமுக கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்தக் கூட்டத்துக்கு முன்னர் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம், முனுசாமி, தங்கமணி, வேலுமணி உள்ளிட்ட  10க்கும் மேற்பட்ட முக்கியத் தலைவர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக தன்னை அறிவிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கூறினார். ஆனால், அதற்கு ஆரம்பத்திலேயே ஓ.பன்னீர்செல்வம் எதிர்ப்பு  தெரிவித்தார். அதிமுக தோல்விக்கு முழு முதல் காரணம் எடப்பாடிதான்.

தென் மாவட்டங்களில் அதிமுக தோற்றதற்கும் நீங்கள்தான் காரணம். வட மாவட்டங்களிலும் அதிமுக தோல்விக்கு நீங்கள் எடுத்த இடஒதுக்கீடு விவகாரம்தான் காரணம்  என்று கடுமையான குற்றச்சாட்டுகளை கூறினார். இதனால் கூட்டத்தில் அனல் பறந்தது. 3 மணி நேரமாக மூத்த தலைவர்கள் கூட்டத்தில் விவாதம் நடந்தது. ஆனால் முடிவு எடுக்க முடியவில்லை. இதனால், எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு சென்ற தலைவர்கள், எந்த முடிவும் எடுக்கவில்லை. திங்கள்கிழமை மீண்டும் கூடி ஆலோசனை நடத்தப்படும் என்று அறிவித்து விட்டு புறப்பட்டுச் சென்றனர்.

 கூட்டம் நடைபெற்ற கட்சி அலுவலகத்துக்கு  வெளியேயும், ஜெயலலிதா சமாதி அருகேயும் அதிமுக தொண்டர்கள் இரு பிரிவாக பிரிந்து எடப்பாடி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. எடப்பாடி அருகே நின்று,  ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக சிலர் கோஷங்களை எழுப்பினர். இதனால் கடுப்பான எடப்பாடி பழனிசாமி, காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார். பின்னர் வீட்டுக்குச் சென்றதும் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

 அதேநேரத்தில் ஓ.பன்னீர்செல்வமும் தனியாக ஆலோசனை நடத்தினார். ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவாக அவரது சமூகத்தைச் சேர்ந்த 16 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாக கூறப்படுகிறது. மேலும் சசிகலாவின் தீவிர ஆதரவாளர்களாக  உள்ள கடம்பூர் ராஜூ உள்ளிட்ட பலரும் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் புது தெம்பு கிடைத்ததாக கருதும் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க முடியாது என்று கூறி வருகிறார். இதற்கு முன்னர்வரை  எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்துதான் அறிக்கை வெளியிடுவார்கள். ஆனால் கடந்த சில நாட்களாக ஓ.பன்னீர்செல்வம் தன்னுடைய பெயரில் தனியாக அறிக்கை விட்டு வருகிறார்.

இதற்கு காரணம், தான் கட்சியின்  தலைவர். தன்னை யாருக்கும் கேள்வி கேட்க முடியாது என்று கூறி வருகிறார். இதனால் திங்கள்கிழமை நடைபெறும் கூட்டத்தில் தனக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்க வேண்டும் என்று கேட்டு பிடிவாதம் பிடிக்க உள்ளார்.
 ஆனால் அவரது எதிர்ப்பையும் மீறி எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டால், தனது ஆதரவு மற்றும் சசிகலா ஆதரவு எம்எல்ஏக்களுடன் கூட்டத்தை விட்டு வெளியேறவும் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.  அப்படி அவர் கூட்டத்தை விட்டு வெளியேறினால், சசிகலா ஆதரவுடன் கட்சியை கைப்பற்றும் நடவடிக்கைகளில் வெளிப்படையாக அவர் இறங்குவார் என்று அவரது ஆதரவாளர்கள் கூறி வருகின்றனர்.

ஓ.பன்னீர்செல்வத்தை கடந்த சில  நாட்களாகவே சசிகலாதான் இயக்குவதாகவே கூறப்படுகிறது. அதில் சசிகலாவை எதிர்த்துதான் தர்மயுத்தம் நடத்தினார் ஓ.பன்னீர்செல்வம். தற்போது அவர்தான் சசிகலாவுக்கு ஆதரவு தெரிவிக்கிறார். அதேநேரத்தில், சசிகலா ஆதரவுடன்  முதல்வர் பதவியைப் பிடித்த எடப்பாடி பழனிசாமி, சசிகலா கட்சிக்குள் வரவே கூடாது என்று விடாப்பிடியாக உள்ளார்.

இதனால் சசிகலாவை மையமாக வைத்துத்தான் தற்போது எதிர்க்கட்சித் தலைவர் பதவி விவகாரத்தில் மோதல்  வெடித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிமுகவில் மோதல் உச்சக்கட்டத்தை எட்டும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இரு தலைவர்களும் இறங்கி வராமல் இருப்பதும், இருவரையும் மூத்த தலைவர்கள் சமரசம் செய்யாமல் இருப்பதும்  கட்சிக்குள் பூகம்பம் ஏற்படுவதற்கான அறிகுறிதான் என்கின்றனர் தொண்டர்கள். திங்கட்கிழமை நடைபெறும் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் கருத்து மோதல் வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

Tags : Is Sasikala running from behind the EPS-OPS clash for the post of Leader of the Opposition?
× RELATED தினமும் பொய் பேசும் அரசியல் காமெடியன் அண்ணாமலை: திருமாவளவன் விளாசல்