×

கள நிலவரத்தை அறிந்து முதல்வர் ஊரடங்கை அறிவித்துள்ளார்: கே.எஸ்.அழகிரி, அன்புமணி வரவேற்பு

சென்னை: புதியதாக பொறுப்பேற்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் கள நிலவரத்தை அறிந்து பொது ஊரடங்கை அறிவித்திருக்கிறார் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வரவேற்பு தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:   நாளுக்கு நாள் கொரோனா தொற்று  அதிகரிக்கும் நிலையில் முதல்வராகப் பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின்  யதார்த்த கள நிலவரத்தை அறிந்து வருகிற 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை பொது  ஊரடங்கை அறிவித்திருக்கிறார். சரியான நேரத்தில், சரியான முடிவை முதலமைச்சர் எடுத்திருக்கிறார். கடுமையான பொது ஊரடங்கைக் கடைப்பிடிப்பதன் மூலமே கொரோனா பரவலைத் தடுக்க முடியும் என்ற அடிப்படையில் முதல்வர் மு.க.  ஸ்டாலின்  எடுத்த முடிவை வரவேற்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

பேருந்துகளில் மகளிருக்கு இலவசப் பயணம் நேற்று அறிவிக்கப்பட்டு, நடைமுறைக்கு வந்திருப்பது மிகுந்த வரவேற்புக்குரியது. அதேநேரத்தில் மகளிருக்கு வழங்கப்படுகிற சலுகைகள், திருநங்கைகளுக்கும் அவசியம் வழங்கப்பட வேண்டும்.  எனவே, பொது ஊரடங்கினால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்படலாம். ஆனால், கொரோனா பாதிப்பிலிருந்து மக்களின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது. அந்த பொறுப்பை உணர்ந்து எடுக்கப்பட்ட ஊரடங்கு  நடவடிக்கையை வரவேற்கிறேன்.

பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி டிவிட்டர் பதிவு: கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழகத்தில் நாளை முதல் 2 வாரங்களுக்கு முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. இது பயனுள்ள நடவடிக்கை. அரசு  அறிவித்துள்ள ஊரடங்குக்கு மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். கொரோனாவில் இருந்து நம்மை காத்து கொள்ள இதுதான் சிறந்த வழி. முழு ஊரடங்கு காலத்தில் ஏழை, நடுத்தர மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால்  அவர்களுக்கு நடப்பு சுழற்சிக்கான 2 மாத மின்சார கட்டணத்தை அரசு ரத்து செய்ய வேண்டும். ஊரடங்கால் வாழ்வாதாரம் இழக்கும் முடி திருத்துவோர், வாடகை வாகன ஓட்டிகள் உள்ளிட்ட அனைத்து தொழில் பிரிவினருக்கும் சிறப்பு நிவாரண  தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Tags : Chief Minister ,KS Alagiri ,Anbumani , Aware of the situation in the field, the Chief Minister has declared a curfew: KS Alagiri, Anbumani welcome
× RELATED இரட்டை இலைக்கு போட்டு வாக்குகளை...