×

நாளை மறுநாள் சட்டப்பேரவை கூடுகிறது: 12ம் தேதி சபாநாயகர் தேர்வு

சென்னை: புதிய சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பதற்காக முதல் சட்டப்பேரவை கூட்டம் 11ம் தேதி நடக்கிறது. 12ம் தேதி சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படுகிறார்கள். தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி நியமனம்  செய்யப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் திமுக 125 இடங்களில் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வராக நேற்று முன்தினம் பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். 33 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர்.

இந்நிலையில், தமிழக சட்டமன்ற உறுப்பினர்களாக புதிதாக தேர்வு செய்யப்பட்ட 234 பேரும் எம்எல்ஏக்களாக நாளை மறுதினம் (11ம் தேதி) பதவியேற்றுக் கொள்கிறார்கள். இவர்களுக்கு தற்காலிக சபாநாயகர் பதவிப்பிரமாணம் செய்து வைப்பார்.  புதிய எம்எல்ஏக்கள் உறுதிமொழியும் எடுத்துக் கொள்வார்கள். இதனால், சட்டப்பேரவையில் மூத்த உறுப்பினரான கீழ்பென்னாத்தூர் தொகுதி எம்எல்ஏ கு.பிச்சாண்டி தற்காலிக சபாநாயகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான அறிவிப்பை தமிழக கவர்னர் பன்வாரிலால்  புரோகித் பிறப்பித்துள்ளதாக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் தெரிவித்துள்ளார். மேலும் நாளை காலை 11 மணிக்கு அவர் கவர்னர் முன்னிலையில் பதவிப் பிரமாணமும் எடுத்துக்கொள்வதாக சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

இதை தொடர்ந்து வருகிற 12ம் தேதி (புதன்கிழமை) புதிய சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடக்கிறது. சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக போட்டியிட விரும்புகிறவர்கள்  மனு தாக்கல் செய்ய வேண்டும். இவர்களை புதிய எம்எல்ஏக்கள் வாக்களித்து தேர்ந்தெடுப்பார்கள். தற்போது திமுக மட்டும் 125 இடங்களிலும், திமுக கூட்டணி 159 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதால் திமுக எம்எல்ஏக்களில் ஒருவரே  சபாநாயகராகவும், துணை சபாநாயகராகவும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். அதனால் சபாநாயகர், துணை சபாநாயகர் ஆகியோர் போட்டியில்லாமல் ஒருமனதாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.

எம்எல்ஏக்கள் பதவியேற்பு விழா மற்றும் சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுவதற்காக, 16வது சட்டமன்ற பேரவையின் முதல் கூட்டம் வருகிற 11 மற்றும் 12ம் தேதி நடக்கிறது. இதுகுறித்து தமிழக சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: பதினாறாவது சட்டமன்ற பேரவையின் முதல் கூட்டத்தொடர் வருகிற 11ம் தேதி (செவ்வாய்)  காலை 10  மணிக்கு, சென்னை வாலாஜா சாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டம் கலைவாணர் அரங்கம், 3வது தளத்தில் உள்ள பல்வகை  கூட்டரங்கத்தில் தொடங்கவுள்ளது.  

அப்போது, இந்திய அரசமைப்பின் கீழ், உறுப்பினர்கள் உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்ளும் நிகழ்ச்சி நடைபெறும். சட்டமன்ற பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான      தேர்தல் சான்றிதழை (Certificate of Election)) உறுதிமொழி அல்லது பற்றுறுதி பிரமாணம் எடுத்துக்கொள்ள வரும்பொழுது உறுப்பினர்கள் தவறாமல் கொண்டுவர வேண்டும். தமிழ்நாடு சட்டமன்ற பேரவையின் பேரவை தலைவர் மற்றும் பேரவை துணை தலைவருக்கான தேர்தல்கள் வருகிற 12ம் தேதி (புதன்) காலை 10 மணிக்கு நடைபெறும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : Speaker , The next day the legislature convenes: the election of the Speaker on the 12th
× RELATED உதகையில் திரைப்பட நகரம் அமைப்பதோடு,...