×

சேலம் உள்பட 4 மாவட்டங்களில் 837 டவுன் பஸ்களில் பெண்கள் இலவச பயணம்: மகிழ்ச்சியோடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி

சேலம்: தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். இதைத் தொடர்ந்து, தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 5 முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். இதில், கொரோனா தொற்று உயர்ந்து வரும் நிலையில், மக்களின் துன்பங்களை போக்குவதற்கும், வாழ்வாதாரத்திற்கு உதவும் வகையிலும், அரசி குடும்ப அட்டை வைத்திருக்கும் குடும்பங்கள் அனைத்திற்கும் ஆறுதல் அளிக்கும் வகையில் ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என்று அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் பொருட்டு முதல் கட்டமாக ரூ.2 ஆயிரம் வீதம் நிவாரணத் தொகை இம்மாதமே வழங்கப்படும். மேலும், ஆவின் பால் லிட்டர் ஒன்றுக்கு ரூ.3 வீதம் வருகிற 16ம் தேதி முதல் குறைத்து விற்பனை செய்யப்படும். தமிழகம் முழுவதும் உள்ள அரசு போக்குவரத்து கழக கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகர பேருந்துகளில் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிருக்கும் கட்டணமில்லாமலும், பேருந்து பயண அட்டை இல்லாமலும் இன்று முதல் பயணம் செய்யலாம்.

மாவட்டம் தோறும் மக்களின் பல்வேறு பிரச்னைகள் தொடர்பான மனுக்கள் மீது ஆட்சிக்கு வந்த 100 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்பட்டு தீர்வு காணப்படும் என்கிற வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற திட்டத்தை செயல்படுத்த ஒரு புதிய துறையை உருவாக்கி அதற்கு ஐஏஎஸ் அதிகாரி ஒருவரை நியமித்தும் அரசாணைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. தொற்று பாதித்த மக்கள், அரசு மருத்துவமனைகளின்றி தனியார் மருத்துவனைகளிலும் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அதற்கான கட்டணத்தை தமிழக அரசே காப்பீட்டு திட்டத்தின் கீழ் ஏற்கப்படும் என்பவை ஆகும். குறிப்பாக அரசு பேருந்தில் பெண்களுக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பு பொது மக்கள் இடத்தில் மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அரசு பஸ்களில் கட்டணம் செலுத்தாமல் பெண்கள் மகிழ்ச்சியுடன் பயணித்து வருகின்றனர்.

சேலம் அரசு போக்குவரத்து கழக கோட்டத்தின் கட்டுப்பாட்டில் வரும் சேலம், நாமக்கல் மற்றும் தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய 4 மாவட்டங்களிலும் 837 டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த பஸ்களில் பெண்கள், கட்டணமின்றி இலவசமாக பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பஸ்களில் ஸ்டிக்கர் ஒட்டியுள்ளனர். இதனால், பெண்கள் ஏறி இலவசமாக பயணம் மேற்கொண்டு வருகின்றனர். சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட், ஜங்ஷன், ஏற்காடு அடிவாரம், வாழப்பாடி, அயோத்தியாப்பட்டணம், ஓமலூர், தாரமங்கலம், மல்லூர், ராசிபுரம், ஆட்டையாம்பட்டி உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சுமார் 150 டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது. இந்த டவுன் பஸ்களில் இன்று காலை, \”மகளிர் பயணம் செய்ய கட்டணம் கிடையாது,’’ என ஸ்டிக்கர் ஒட்டினர். இதையடுத்து டவுன் பஸ்களில் பெண்கள், கட்டணமின்றி இலவசமாக பயணம் செய்தனர்.

கிராமங்களில் இருந்து காய்கறி வியாபாரத்திற்கு வந்தவர்களும், பல்வேறு அரசு, தனியார் நிறுவனங்களுக்கு வேலைக்கு சென்ற பெண்களும் என ஆயிரக்கணக்கானோர் பயன் பெற்றனர். சேலம் பழைய பஸ் ஸ்டாண்டில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட், ஜங்ஷன், அஸ்தம்பட்டி, அடிவாரத்திற்கு அதிகப்படியான பெண்கள் இலவசமாக பயணித்தனர். பஸ்களில் 50 சதவீத பயணிகள் மட்டுமே பயணிக்க வேண்டும் என்பதால், அதனை கணக்கில் கொண்டு பயணிகளை ஏற்றிக் கொண்டு பஸ்கள் புறப்பட்டுச் சென்றது.இதுபற்றி பஸ்களில் பயணித்த பெண்கள் கூறுகையில், \”தேர்தல் வாக்குறுதியில் கூறியதை முதல்வர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றியுள்ளார். அவரது அறிவிப்பு எங்களுக்கு மகிழ்ச்சியை தருகிறது. மாதத்திற்கு ₹2 ஆயிரம் வரை பஸ் டிக்கெட்டிற்காக செலவு செய்வோம். தற்போது அந்த பணம் மிஞ்சமாகிறது. கொரோனா பரவலின் இக்கட்டான நிலையில், இப்படியும் உதவி செய்யலாம் என முதல்வர், பெண்களுக்கு இலவச பயண சலுகையை அமல்படுத்தியுள்ளார். அவருக்கு மகிழ்ச்சியோடு நன்றி தெரிவிக்கிறோம்’’ என்றனர்.

Tags : Salem ,BC ,Stalin , Free travel for women on 837 town buses in 4 districts including Salem: Thank you to Chief Minister MK Stalin for the pleasure
× RELATED சேலம் ஆத்தூரில் அமைச்சர் உதயநிதி...