×

ஆந்திராவில் கொரோனா பாசிட்டிவ் எனக்கூறி திருமணத்தை நிறுத்திய மணப்பெண்!!

திருமலை:ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டம், தர்மவரத்தை சேர்ந்தவர் ஹரிபிரசாத். இவருக்கும் ஆனந்தபுரம் முதுகுப்பா பகுதியை சேர்ந்த குஷ்மா என்பவருக்கும் பெற்றோர் திருமணம் செய்ய ஏற்பாடு செய்தனர். அதன்படி, கதிரியில் உள்ள கோயிலில் நேற்று காலை திருமணம் நடக்க இருந்தது. அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருவீட்டாரும் வந்தனர். நேற்று முன்தினம் இரவு மஞ்சள் நலங்கு சடங்குகள் அனைத்தும் முடிந்த நிலையில் திடீரென குஷ்மா தனக்கு கொரோனா பாசிட்டிவ் வந்திருப்பதாகவும், எனவே தற்போது எனக்கு திருமணம் செய்ய வேண்டாம் என கூறி திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

மேலும், தனக்கு கட்டாய திருமணம் செய்வதாக கூறி கதிரி காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இதுதொடர்பாக ஹரிபிரசாரத்தின் பெற்றோர், ‘குஷ்மாவிற்கு அவரது தாயார் மட்டும் உள்ளதால், வறுமையில் உள்ள அவர்களுக்கு மேலும் கஷ்டம் கொடுக்கக்கூடாது என நினைத்து திருமண செலவிற்காக ₹1 லட்சத்து 50 ஆயிரம் பணம் மற்றும் 15 சவரன் நகைகள் வாங்கி கொடுத்தோம். எனவே தங்களது மகனை திருமணம் செய்து கொள்ள வேண்டும். இல்லையெனில் தாங்கள் கொடுத்த பணம் மற்றும் நகைகளை பெற்று தரவேண்டும் என போலீசில் தெரிவித்தனர். இருதரப்பு பேச்சை கேட்ட போலீசார் பெண்ணின் விருப்பமில்லாமல் திருமணத்தை செய்ய முடியாது என்றும், பணம் கொடுக்கல் வாங்கல் குறித்து பேசி தீர்த்துக்கொள்ளுங்கள்.

கொரோனா பாசிடிவ் வந்த நிலையில் காவல் நிலையத்தில் இருக்கக்கூடாது. நோய்த்தொற்று பரப்புதல் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்படும் என கூறி போலீசார் எச்சரித்து அனுப்பினர். அப்போது மணமகன் நகை, பணத்திற்காக கொரோனா பாசிட்டிவ் எனக்கூறி மணமகள் ஏமாற்றுவதாக மணமகன் குற்றஞ்சாட்டினார். இதனால் உண்மை நிலை என்ன? என்பது தெரியாமல் போலீசார் குழப்பமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags : Andhra Pradesh , கொரோனா பாசிட்டிவ்
× RELATED ஆந்திர மாநிலம் விஜயவாடாவில்...