×

கட்சிக்குள் மோதல் எதிரொலி: அரசியலில் இருந்து விலக கமல்ஹாசன் முடிவு? காலியாகும் மநீம கூடாரம்

சென்னை:  நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற தனிக்கட்சியை ஆரம்பித்து, ரஜினி போல் அல்லாமல் கட்சி ஆரம்பித்த கையோடு, அவரது கட்சியை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வைத்தார். அந்த தேர்தலில் போட்டியிட்ட கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி 3.77 சதவீத வாக்குகளையும் பெற்றது.  தொடர்ந்து, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி களமிறங்கியது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டார். சரத்குமாரின் சமக, பாரிவேந்தரின் ஐஜேகே ஆகிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்த மக்கள் நீதி மய்யம் அனைத்து தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. பல தொகுதிகளில் 3, 4ம் இடங்களை பிடித்தது. அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனே கோவை தெற்கில் தோல்வியை தழுவினார். மிகவும் குறைவான வாக்கு வித்தியாசத்தில் அவர் தோல்வியை தழுவியிருந்தாலும் அது மிகப்பெரிய அதிர்ச்சியை அக்கட்சி நிர்வாகிகளுக்கு ஏற்படுத்தியது. இதையடுத்து, கட்சி நிர்வாகிகளிடம் பேசிய கமல்ஹாசன், கட்சி விரைவில் மறுசீரமைக்கப்படும் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

 இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் ஆர்.மகேந்திரன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். தனது ராஜினாமா கடிதத்தையும் கட்சி மேலிடத்திடம் அவர் சமர்ப்பித்துள்ளார். கட்சியில் இருந்து விலகியுள்ள ஆர்.மகேந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கட்சி வெளிப்படைத்தன்மை இல்லாமல், ஜனநாயக விரோத முறையில் செயல்பட்டு வருவதாகவும், கமல் ஒரு சில நபர்களால் தவறாக வழிநடத்தப்படுகிறார் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.
 இந்த சூழ்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் பொதுச்செயலாளர்கள் சந்தோஷ் பாபு. சி.கே.குமரவேல், மவுரியா, பொதுச்செயலாளர் முருகானந்தம், நிர்வாக குழு உறுப்பினர் உமாதேவி உள்ளிட்டோரும் ராஜினாமா செய்துள்ளனர். கட்சியை சீரமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தலைவர் கமல்ஹாசனுக்கு அனைத்து உரிமைகளையும் வழங்கி அனைத்து நிர்வாகிகளும் பதவி விலகுகிறோம் என்று தெரிவித்துள்ளனர்.

 மக்கள் நீதி மய்யத்தின் முக்கிய நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்து வருவது கட்சி தலைவர் கமல்ஹாசனுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. கட்சியிலிருந்து நிர்வாகிகள் தொடர்ந்து விலகி வருவதால் மநீம கூடாரமே காலியாகி வருவதாக அக்கட்சியினர் கடும் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறது.  பெரிய அளவில் மநீம இந்த தேர்தலில் பேசப்படும் என்று எதிர்பார்த்த நிலையில் கட்சியின் வளர்ச்சியும் சொல்லிக் கொள்ளும்படியாக இல்லை என்பதால் கமல்ஹாசன் அரசியலில் இருந்து ஒதுங்கி விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டதாக தனது நெருக்கமான நண்பர்கள் வட்டாரத்தில் ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. மக்கள் நீதி மய்யம் கட்சிக்குள் எழுந்துள்ள புகைச்சல் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குழப்பும் மநீம ஓய்வு ஐஏஎஸ்
மநீம கட்சியில் முக்கிய நிர்வாகிகள் பலர் ராஜினாமா செய்ததால் பரபரப்பு எழுந்துள்ள நிலையில், ராஜினாமா செய்தவர்களில் ஒருவரான ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியும், மநீம தலைமை நிலைய பொதுச் செயலாளருமான சந்தோஷ்பாபு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ‘‘மநீம நிர்வாக குழு உறுப்பினர்கள் அனைவரும் கட்சியை விட்டு வெளியேறி விட்டதாக தவறான தகவல் பரவி வருகிறது. தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்கள் ராஜினாமா கடிதங்களை தலைவரிடம் கொடுத்தனர். தேர்தல் கால செயல்பாடுகளை ஆய்வு செய்து கட்சியை மறுகட்டமைப்பு ஏதுவாக இருக்கும் நோக்கில் அளிக்கப்பட்ட கடிதங்கள் தலைவரின் பரிசீலனையில் இருக்கிறது. கட்சியின் துணை தலைவராக இருந்த டாக்டர் மகேந்திரன் மட்டுமே கட்சி பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். கட்சி கட்டமைப்பில் செய்யப்படும் மாற்றங்கள், புதிய பொறுப்பாளர்கள் குறித்த விவரங்கள் விரைவில் முறையாக அறிவிக்கப்படும் என கூறியுள்ளார். தேர்தல் தோல்வியால் மநீம கட்சியில் மோதல் எழுந்துள்ள நிலையில் சந்தோஷ் பாபுவின் அறிக்கை கட்சியினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags : Kamallhassan , Echo of conflict within the party: Kamal Haasan's decision to quit politics? Empty mane tent
× RELATED நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான...