இன்று மாட்ரிட் ஓபன் பைனல் ஆஷ்லிக்கு பதிலடி தருவாரா அர்யனா

மாட்ரிட்: ஸ்பெயினில் நடக்கும்  ‘மாட்ரிட் மகளிர் ஒபன் டென்னில் போட்டியின் இறுதி  ஆட்டத்தில் இன்று ஆஷ்லி பார்தி-அர்யனா சபாலங்கா மோத உள்ளனர்.உலகின் முதல் நிலை வீராங்கனையான ஆஷ்லி பார்தி(ஆஸ்திரலேியா) அரையிறுதி ஆட்டத்தில் பவுலா படோசா(ஸ்பெயின்)வை 6-4-6-3 என நேர் செட்களில்  வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.  ஆஷ்லி தான் கடைசியாக மோதிய 9 ஆட்டங்களில் தொடர்ந்து வெற்றிப் பெற்றுள்ளார். கடைசியாக  அவர் சார்லெஸ்டன் ஓபன் காலிறுதியில்  பவுலா படோசாவிடம்  6-4, 6-3 என நேர் செட்களில் தோற்றார். அதே போல் உலகின் 7ம் நிலை வீராங்கனையான அர்யனா சபாலங்கா(பெலாரஸ்) அரையிறுதி ஆட்டத்தில் அனஸ்டசியா பவ்லிசெகோவை 6-2. 6-3 என நேர்செட்களில் வென்று இறுதிப்போட்டிக்கு தகுதிப்பெற்றார். அர்யனா தான் விளையாடிய கடைசி 5 ஆட்டங்களில் தொடர்ந்து  வென்றுள்ளார். அவர் கடைசியாக ஜெர்மனியில் நடந்த ஸ்டட்கர்ட் ஓபன் இறுதியாட்டத்தில் ஆஷ்லி பார்தியிடம்  3-6, 6-0, 6-3  என்ற செட்களில் போராடி தோற்றார்.

ஆஷ்லி பார்தி-அர்யனா சபலங்கா இருவரும் 2018ம் ஆண்டு முதல் இதுவரை  7 ஆட்டங்களில் நேருக்கு நேர் மோதியுள்ளனர். அவற்றில் 4 ஆட்டங்களில்  ஆஷ்லி பார்தியும், 3 ஆட்டங்களில் அர்யனா சாபலங்காவும் வெற்றி வாகை சூடியுள்ளனர்.

இன்று 8வது முறையாக  25வயதான ஆஷ்லியும்,  23வயதான அர்யனாவும் மீண்டும் இறுதிப்போட்டியில் மோதுகின்றனர்.  ஜெர்மனி ஸ்டட்கர்ட் ஓபனில் தோற்றதற்கு அர்யனா சபாலங்கா பதிலடி தருவாரா, இல்லை ஆஷ்லி பார்தி வெற்றியை தொடர்வாரா என்பது இன்று தெரியும்.

Related Stories: