×

அதிமுக பொதுச்செயலாளர் பதவி விவகாரம்: புதிய விதிகளின்படி அதிமுக செயல்பட தடை கோரி வழக்கு: ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ், சசிகலா பதிலளிக்க சிவில் கோர்ட் நோட்டீஸ்

சென்னை: புதிய விதிகளின்படி அதிமுக கட்சி செயல்பட தடை கோரி தாக்கல் செய்த மனுவுக்கு பதிலளிக்கும்படி அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோருக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்றம் (சிட்டி சிவில் கோர்ட்) உத்தரவிட்டுள்ளது.  திண்டுக்கல்லை சேர்ந்த அதிமுக உறுப்பினர் சூரியமூர்த்தி, சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: அதிமுக விதியின்படி, பொதுச் செயலாளர் கட்சி உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். இந்த விதியை திருத்த முடியாது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பிறகு தற்காலிக பொதுச்செயலாளராக சசிகலாவை நியமித்து பொதுக்குழு, செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.  
 
பின்னர் சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறை சென்ற பிறகு தற்போதைய ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து  பொதுக்குழு கூட்டத்தை கூட்டி  பொதுச் செயலாளர் பதவியை  நீக்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுச் செயலாளர் பதவியை நீக்குவதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லாத நிலையில்,   பொதுச் செயலாளர் பதவியை நீக்கியது கட்சியின் விதிகளுக்கு முரணானது, மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்திற்கு முரணானது. கட்சியில் தற்போது நடைமுறையில் இருக்கக்கூடிய இரட்டை தலைமையை  உறுப்பினர்கள் விரும்பவில்லை. கடந்த 2014 அக்டோபரில் நடத்தப்பட்ட உள்கட்சி தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட  செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்து விட்டதால், உட்கட்சி தேர்தலை நடத்த அதிமுக உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திற்கு 2020 ஆகஸ்டில் மனு அளிக்கப்பட்டது.

இதுகுறித்து தேர்தல் ஆணையம் அனுப்பிய கடிதத்திற்கு பதில் அளித்த ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர், விரைவில் தேர்தல் நடத்துவதாக உறுதியளித்து ஓராண்டுக்கு மேலாகியும் இன்னும் தேர்தல் நடத்தவில்லை. கட்சியின் விதிகளுக்கு முரணாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ள புதிய விதிகளின்படி செயல்பட கட்சிக்கு தடை விதிக்க வேண்டும். பழைய  விதிகளின்படி கட்சி  செயல்பட உத்தரவிட வேண்டும்: மேலும், கட்சியில் புதிய நியமனங்கள் மேற்கொள்வதற்கு அவைத்தலைவர், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளருக்கு தடை விதிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிமன்றம், இந்த மனுவுக்கு ஜூலை 7ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, சசிகலா ஆகியோருக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தது.



Tags : O. RB S, d. RB S. ,Sasicila , AIADMK general secretary post issue: AIADMK seeks ban on functioning under new rules: OPS, EPS, Sasikala respond civil court notice
× RELATED சசிகலாவுடன் டிடிவி திடீர் சந்திப்பு:...