புதுடெல்லி:அரசு கட்டடங்களை புதுப்பிக்கும்விதமாக சென்ட்ரல் விஸ்டா என்ற திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இத்திட்டத்தின் கீழ் புதிய நாடாளுமன்றம், தலைமை செயலகம், பிரதமர் இல்லம் போன்றவற்றின் கட்டுமானப் பணிகள் நடந்து வருகிறது. கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்திருப்பதால் கட்டுமானப் பணிகளுக்கு தடை விதிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்றை வழக்கறிஞர் சித்தார்த் லுத்ரா தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் வினீத் சரண் மற்றும் தினேஷ் மகேசரி அமர்வில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் முடிவில் தீர்ப்பளித்த நீதிபதிகள், ‘மனுதாரர் சென்ட்ரல் விஸ்டா திட்டம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த வழக்கு மே 10ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. அதற்கிடையில் உச்சநீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்திருக்கிறார். நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும்விதமான இதுபோன்ற வழக்கை ஏற்க முடியாது. அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனில், மீண்டும் டெல்லி உயர்நீதிமன்றத்தையே மனுதாரர் அணுகலாம்’ என்று உத்தரவிட்டனர்.