கொரோனா தொற்று தடுப்பு கூடுதல் கட்டுபாடு அமல் தஞ்சையில் பகல் 12 மணிக்கு கடை அடைப்பு-குறைந்த பயணிகளுடன் பஸ்கள் இயங்கின

தஞ்சை : கொரோனா தொற்று தடுப்பு கூடுதல் கட்டுபாடு அமலுக்கு வந்ததால், தஞ்சை கடைவீதி வெறிச்சோடியது. இதனால் குறைந்த பயணிகளுடன் பஸ்கள் இயக்கப்பட்டன.கொரோனா தொற்று தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஊரடங்கு கட்டுப்பாடுகள் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டாலும் தொற்று பரவி வருவது குறைந்தபாடில்லை. இதனால் தமிழக அரசு மேலும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.

நேற்று முதல் மதியம் 12 மணிக்கு மேல் மருந்து கடை, பால் தவிர மற்ற அனைத்து கடைகளும் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இதன்படி காலையில் திறக்கப்பட்டிருந்த காய்கறி கடைகள், மீன், இறைச்சி கடைகள், சிறு டீ கடைகள், மளிகை கடைகள் அனைத்தும் மதியம் 12 மணிக்கு மூடப்பட்டன.

அக்கடைகளில் வேலை பார்க்கும் ஊழியர்கள் காலையிலேயே கடை வியாபாரத்தை பார்க்க தொடங்கினர். மக்கள் கூட்டம் இல்லாததால் கடைகளிலும் ஓரளவு மட்டுமே வியாபாரம் இருந்தது. கடைகள் மதியமே பூட்டப்படும் என்பதால் கடை வீதிகளில் சாதாரணமாக இருக்கும் மக்கள் நடமாட்டம் நேற்று காலை முதலே காணப்படவில்லை.

மதியத்திற்கு மேல் மக்கள் நடமாட்டம் இல்லாமல் கடைவீதிகள் வெறிச்சோடி காணப்பட்டன. எப்போதும் மக்கள் நடமாட்டம் இருக்கும் தெற்குவீதி, தெற்கலங்கம், பழைய பேருந்து நிலையம், காந்திஜி சாலை, அண்ணா சிலை, பர்மா பஜார், கீழவாசல், ரயிலடி, புதிய பேருந்து நிலையம், ஆர்.ஆர்.நகர் போன்ற பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டு ஆள்நடமாட்டம் இன்றி காணப்பட்டது.

மேலும் நகர பேருந்துகள் பயணிகள் கூட்டமின்றி இயக்கப்பட்டன. பேருந்துகளில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பயணிகள் உட்கார்ந்து பயணித்தனர். இதனால் மதியதிற்கு மேல் பல்வேறு மார்க்கங்களில் செல்லும் பல பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டது. ஒரு சில பேருந்துகளே தொடர்ந்து இயக்கப்பட்டன.

டாஸ்மாக் கடைகள் காலை 8 மணி முதல் மதியம் 12 மணி வரை மட்டுமே செயல்படும் என அறிவிக்கப்பட்டதால் காலையிலேயே மதுபிரியர்கள் மதுபான கடைகளில் குவிந்தனர். மதியம் 12 மணிக்கு கடை பூட்டப்படும் நேரத்தில் தஞ்சை நகரில் பல இடங்களில் உள்ள கடைகளில் மதுபிரியர்களின் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியின்றி கூட்டமாக மது வாங்கியதால் டாஸ்மாக் மதுபான விற்பனையாளர்கள் அச்சமடைந்தனர். சமூக இடைவெளியை கடைபிடிக்க வற்புறுத்தியும் யாரும் கேட்காத நிலையே நீடித்தது. மதியம் 12 மணிக்கு டாஸ்மாக் மதுபான கடைகளை மூடப்பட்டாலும் கள்ளச்சந்தையில் அக்கடைகளின் அருகிலேயே மதுபான விற்பனை தொடர்ந்தது.

திருக்காட்டுப்பள்ளி:

தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அரசு அடுத்தடுத்த நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு, மற்ற நாட்களில் இரவு 10 மணிக்கு மேல் கடைகளை திறக்க அனுமதியில்லை என்றும் அறிவித்திருந்த நிலையில் நேற்று (6ம் தேதி) முதல் பகல் 12 மணி வரை மட்டும் காய்கறி, மளிகை கடைகளை திறக்க அனுமதி அளித்தது.

இதையடுத்து திருக்காட்டுப்பள்ளி பேரூராட்சி சார்பில் நண்பகல் 12 மணிக்கு சங்கு ஒலி எழுப்பட்டது. கடைவீதியில் உள்ள அனைத்து கடைகாரர்களும் மளமளவென்று கடைகளை மூடினர். பின்னர் மக்கள் நடமாட்டமே இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

பட்டுக்கோட்டை சப்-கலெக்டர் ஆய்வு:

பட்டுக்கோட்டையில் சப்-கலெக்டர் பாலச்சந்தர், டி.எஸ்.பி. புகழேந்திகணேஷ் ஆகியோர் நகரில் உள்ள அனைத்து கடை வீதிகளிலும் சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்று ஆய்வு செய்தனர். அப்போது பகல் 12 மணிக்கு மேல் திறந்திருந்த கடைகளுக்கு அபராதம் விதித்த சப்-கலெக்டர் அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிமுறைகளை மதித்து நடக்க வேண்டும், 12 மணிக்கு மேல் கடைகள் திறக்கக்கூடாது என்று அறிவுறுத்தினார். மேலும் ஓட்டல்களுக்குள் சமையலறை வரை உள்ளே சென்று அதிரடி ஆய்வு நடத்திய சப்-கலெக்டர் ஓட்டல்களில் பணிபுரியக்கூடிய ஊழியர்கள் முகக்கவசம் கட்டாயம் அணிந்திருக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

இந்த அதிரடி ஆய்வின்போது பட்டுக்கோட்டையில் திடீரென மழை பெய்தது. அந்த மழையையும் பொருட்படுத்தாது சப் கலெக்டர், டிஎஸ்பி ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வின் போது தாசில்தார் (பொறுப்பு) சாந்தகுமார், நகராட்சி ஆணையர் சென்கிருஷ்ணன், சுகாதார அலுவலர் ஸ்டீபன் அந்தோணிராஜ், சுகாதார ஆய்வாளர்கள் அறிவழகன், ரவிச்சந்திரன், ஆரோக்கியசாமி மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.

Related Stories:

>