பூந்தோட்டம் பகுதியில் வெள்ளரிப்பழம் அறுவடையில் விவசாயிகள் மும்முரம்-ரூ.40 முதல் 70 வரை விற்பனை ஆகிறது

திருவாரூர் : திருவாரூர் அருகே பூந்தோட்டம் பகுதியில் வெள்ளரிப்பழம் அறுவடை பணிகள் மும்முரமாக நடை பெற்று வருகிறது.

கோடை வெயிலின் தாக்கத்தை குறைக்க அதிக நீர்சத்துள்ள, வெள்ளரியை மக்கள் ஆர்வத்துடன் சாப்பிடுகின்றனர். வெள்ளரி பழத்தை சர்க்கரையுடன் சேர்த்தும், ஜூஸ் செய்தும் சாப்பிடுவதன் மூலம் உடலை குளிர்ச்சியாக வைக்க உதவுகிறது. தற்போது கோடை காலம் என்பதால் வெள்ளரி பழம் விளைச்சல் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், திருவாரூர் அருகே பூந்தோட்டம் பகுதியில் வெள்ளரிப்பழம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. தற்போது அந்த பகுதியில் வெள்ளரிப் பழங்களை அறுவடை செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. அறுவடையாகும் வெள்ளரிப் பழங்கள் விற்பனைக்காக வெளியூர்களுக்கு வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து, வெள்ளரிப்பழம் சாகுபடி செய்து வரும் விவசாயிகள் கூறுகையில், வெள்ளரிப்பிஞ்சு என்பது தனிரகம். வெள்ளரிப்பழம் என்பது தனிரகம். நாங்கள் வெள்ளரிப்பழத்தை சாகுபடி செய்து வருகிறோம். இதனை சாகுபடி செய்வதற்கு நிலத்தை நன்கு உழவு செய்ய வேண்டும். அதன் பின்பு 10 அடிக்கு ஒரு குழி போட்டு அதில் விதைகளை போட வேண்டும்.

நாங்கள் இயற்கை வேளாண் முறையில் சாகுபடி செய்து வருகிறோம்.. செயற்கை உரத்தை பயன்படுத்துவதில்லை. மாட்டுச்சாணம், ஆட்டு சாணம் மட்டுமே போட்டு சாகுபடி செய்து வருகிறோம்.65 நாட்களில் வெள்ளரிப்பழங்களை அறுவடை செய்ய தொடங்கலாம். ஒரு பழத்தை ரூ.40 முதல் ரூ.70 வரை விற்பனை செய்து வருகிறோம். கோடை காலத்தில் வெள்ளரிப்பழம் உடலுக்கு நல்லது. வெள்ளரி சாகுபடியை ஊக்குவிக்க அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என்றனர்.

Related Stories:

>