×

திருவாரூர் மாவட்டத்தில் கொரோனா தடுக்க புதிய கட்டுப்பாடுகள் எதிரொலி 15 ஆயிரம் கடைகள் பகல் 12 மணிக்கே மூடல்-மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடிய சாலைகள்

திருவாரூர் : அரசின் உத்தரவுபடி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன.
தற்போது தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் என்பது 2 வது அலையாக நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதன்படி தமிழகத்தில் மட்டும் நாள் ஒன்றுக்கு தற்போது 30 ஆயிரத்தை நெருங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனாவின் தாக்கத்தை கட்டுப்படுத்தும் வகையில் தமிழக அரசு சார்பில் கடந்த 26ம் தேதி முதல் பல் வேறு கட்டுப்பாடுகள் அமல் படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில் நேற்று முதல் வரும் 20ம் தேதி வரையில் பல்வேறு கட்டுபாடுகளை விதித்துள்ளது. அதன் படி காய்கறி, மளிகை, டீ கடைகள், இறச்சி மற்றும் பழகடைகள், பூகடைகள் உள்ளிட்ட அளைத்து கடைகளும் மதியம் 12 மணிக்குள் பூட்டப்பட வேண்டும். ஓட்டல்களில் பார்சல்க்கு மட்டுமே அனுமதி, அரசு அலுவலகங்களில் 50 சதவிகிதம் ஊழியர்கள் மட்டுமே பணி என்பது உள்ளிட்ட பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இதனையட்டி திருவாரூர் மாவட்டத்தில் நேற்று திருவாரூர் நகர் மற்றும் ஊரக பகுதிகள் திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, நீடாமங் கலம், வலங்கைமான், குடவாசல், நன்னிலம் மற்றும் கொரடாச்சேரி உட்பட மாவட்டம் முழுவதும் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் மதியம் 12 மணியளவில் அடைக்கப்பட்டன. இதனால் சாலைகளில் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பெட்ரோல் பங்குகள் வழக்கம் போல் இயங்கிய நிலையிலும் அதில் வாடிக்கையாளர்கள் கூட்டமின்றி வெறிச்சோடி இருந்தது.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் நேற்று காலை 6 மணி முதல் 12 மணி வரை மட்டுமே காய்கறி கடைகள், தேநீர் கடைகள், மளிகை கடைகள் செயல்பட அனுமதிக்கப்பட்டது. முதல் நாளான நேற்று திருத்துறைப்பூண்டியில் 12 மணிக்கும் மேல் திறந்து இருந்த கடைகளை முதல் நாள் என்பதால் நகராட்சி, காவல்துறையினர் மற்றும் வருவாய்துறையினர் கடைகளை அடைக்குமாறு எச்சரித்தனர். இதன் பிறகு பல கடைகள் மூடப்பட்டது.

நகரில் ஜவுளி கடைகள், எலக்ட்ரிக் கடைகள், நகைக்கடைகள் 12 மணிக்கு முன் அடைக்கப்பட்டது. 12 மணிக்கு மேல் 500க்கும் மேற்பட்ட கடைகள் மூடப்பட்டதால் நகரில் பொதுமக்கள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டது ஆனால் கிராம பகுதிகளில் பெரும்பாலான கடைகள் அடைக்கப்படவில்லை.

திருத்துறைப்பூண்டி நகராட்சி சார்பில் கொரோனா வேடமிட்டு புதிய பேருந்துநிலையத்தில் பேருந்துகள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அனைவரும் முககவசம் அணிய வேண்டும் சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் அடிக்கடி கைகளை சோப்பு மற்றும் சானிடைசர் கொண்டு சுத்தம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட அரசின் வழிகாட்டு முறைகளை பின்பற்ற வேண்டும் என நகராட்சி ஆணையர் (பொ) செங்குட்டுவன் தலைமையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

முத்துப்பேட்டை: முத்துப்பேட்டையில் மளிகை. பலசரக்கு மற்றும் காய்கறி கடைகள் திறக்கப்பட்டது. இதில் நேற்று முதல் நாள் என்பதால் பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க கடைத்தெருக்களில் குவிந்து காணப்பட்டன. நேரம் ஆக ஆக கடைத்தெரு பரபரப்புடன் காணப்பட்ட நிலையில் பகல் 12 மணி ஆனதும் திறந்து இருந்த அனைத்து கடைகளும் பூட்டப்பட்டது. இதனை போலீசாரும், பேரூராட்சி அலுவலர்களும் அனைத்து பகுதிகளுக்கும் சென்று கண்காணித்தனர். இதனால் பூட்டாமல் இருந்த ஒரு சில கடைகளையும் உடனடியாக பூட்டி சென்றனர்.

இதனால் முத்துப்பேட்டையில் முக்கிய பகுதியான பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், திருத்துறைப்பூண்டி சாலை, ஆசாத்நகர், மன்னை சாலை, குமரன் பஜார், பட்டுக்கோட்டை சாலை, பெரியக்கடைதெரு ஆகிய பகுதியில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.

Tags : Tiruwarur , Thiruvarur: More than 15,000 shops were closed in Thiruvarur district yesterday as per the government order.
× RELATED திருவாரூர் அருகே சிறுமிகளிடம்...