கடலாடி, சாயல்குடியில் கொரோனாவால் வாரச்சந்தை ரத்து-தாசில்தார் அறிவிப்பு

சாயல்குடி : கடலாடியில் இன்றும், சாயல்குடியில் நாளையும் வாரச்சந்தை நடக்காது என வருவாய்த்துறை தெரிவித்துள்ளது

வாரந்தோறும் கடலாடியில் வெள்ளிக்கிழமையும், சாயல்குடியில் சனிக்கிழமையும் வாரச்சந்தை நடப்பது வழக்கம். கடலாடியில் ஒருவனேந்தல், ஆப்பனூர், ஆ.புனவாசல், மீனங்குடி, சாத்தங்குடி உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராமமக்களும், சாயல்குடியில் எம்.கரிசல்குளம், கன்னிராஜபுரம், கீழச்செல்வனூர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட கிராம மக்களும் வந்து காய்கறி, பழங்கள், பலசரக்கு, மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்கிச் செல்வர். இதனால் சந்தை அன்று மட்டும் வழக்கத்தை விட கூட்டம் அதிகரித்து காணப்படும். பொருட்கள் வாங்கும் போது பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நெருக்கமாக நின்று வாங்கிச் செல்வர். இதனால் கொரோனா பரவும் அபாயம் உள்ளது.

இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா இரண்டாம் அலை பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. தமிழக அரசும் நேற்று முதல் நேர கட்டுப்பாடுகளை அறிவித்து அமலுக்கு வந்தது. இதனால் நண்பகல் 12 மணிக்கு மேல் கடைகள் அனைத்தும் மூடப்பட்டு, பஜார்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

இந்நிலையில் கடலாடியில் இன்றும், சாயல்குடியில் நாளையும் வாரச்சந்தை நடக்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்தனர். ஊரடங்கு காரணமாக நடக்காது என வருவாய்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து கடலாடி தாசில்தார் சேகர் கூறும்போது, தமிழக அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறை கட்டுப்பாடு உத்தரவு மற்றும் மாவட்ட கலெக்டரின் வழிகாட்டுதலின்பேரில் இன்று கடலாடியிலும், நாளை சாயல்குடியிலும் வாரச்சந்தை நடக்காது. இந்த தடையானது மறு உத்தரவு வரும் வரை அமலில் இருக்கும் என்றார்.

Related Stories:

>