தஞ்சாவூரில் முகக்கவசம் அணியாதவர்களிடம் ரூ.2 கோடி வசூல்!: கொரோனா விதிமுறைகளை மீறியதால் நடவடிக்கை..!!

தஞ்சை: தஞ்சை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாத 1 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 2 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா பரவ தொடங்கிய நாளில் இருந்து முகக்கவசம் அணியாமல் வெளியில் சுற்றியவர்கள், சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வந்த போதிலும் இடையில் அதனை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. தற்போது கொரோனா நோய் தொற்றின் 2ம் அலை வேகமாக பரவி வரும் நிலையில், அதனை கட்டுப்படுத்துவதற்காக முகக்கவசம் அணிய வேண்டும். 

சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் இதனை மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்தும் அதனை மீறி நடப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. அந்த வகையில் தமிழகத்திலேயே தஞ்சை மாவட்டத்தில் தான் அதிக அளவு வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. முகக்கவசம் அணியாதவர்கள்  மீது 1 லட்சத்து 2 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து 2 கோடியே 5 லட்சம் ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. 

இதேபோன்று சமூக இடைவெளியை கடைபிடிக்காதவர்கள் மீது 361 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 1 லட்சத்து 80,000 ரூபாய் அபராத தொகை வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும் தஞ்சை மாவட்டத்தில், கட்டுப்பாட்டை மீறி நேற்று மாலை 5 மணி வரை செயல்பட்ட 5 கடைகள் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

>