பாதுகாப்பு வழிமுறைகளை நடைமுறைப்படுத்த 15 மண்டலங்களுக்கு அமலாக்க குழு: ஆய்வு வாகனத்தை மாநகராட்சி ஆணையர் போலீஸ் கமிஷனர் தொடங்கி வைத்தனர்

சென்னை: சென்னை மாநகராட்சியில் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை நடைமுறைப்படுத்த 15 மண்டலங்களுக்கு ஒரு ஊரடங்கு அமலாக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ள ஆய்வு வாகனத்தை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் மற்றும் போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் கொடியசைத்து துவக்கி வைத்தனர். இதுகுறித்து மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கைகளை மேலும் தீவிரப்படுத்த தவிர்க்க முடியாத காரணங்களின் அடிப்படையில் நேற்று காலை 4 மணி முதல் 20ம் தேதி அதிகாலை 4 மணி வரை புதிய கட்டுப்பாடுகள் தமிழக அரசால் விதிக்கப்பட்டுள்ளது.   

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அரசின் மேற்குறிப்பிட்ட வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்த மண்டலத்துக்கு ஒரு குழு என மொத்தம் 15 மண்டல ஊரடங்கு அமலாக்க குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில் சென்னை மாநகராட்சி சார்பில் உதவி வருவாய் அலுவலர் மற்றும் உரிமம் ஆய்வாளர் நிலையில் 2 நபர்கள், காவல்துறையின் சார்பில் உதவி ஆய்வாளர் மற்றும் காவலர் நிலையில் 2 நபர்கள் மற்றும் சென்னை மாவட்ட வருவாய் துறை சார்பில் வட்டாட்சியர் அல்லது துணை  வட்டாட்சியர் நிலையில் ஒருவர் என மொத்தம் 5 நபர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.   

இக்குழுவினர் தங்கள் மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் நாள்தோறும் ரோந்து பணியில் ஈடுபட்டு அரசின் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றாத நபர்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீது சட்டபடி நடவடிக்கை மேற்கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவினருக்கான பயிற்சி வகுப்பு ஆணையர் பிரகாஷ் மற்றும் காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் தலைமையில் நேற்று நடைபெற்றது.  இதனைத் தொடர்ந்து, மண்டல அளவில் நியமிக்கப்பட்டுள்ள மண்டல ஊரடங்கு அமலாக்க குழுவின் வாகனத்தினை ஆணையர், காவல் ஆணையர் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

Related Stories:

>