அம்பத்தூர், திருமங்கலம் பகுதியில் இளம்பெண், தொழிலாளி கொலை: 3 பேர் கைது

சென்னை: அம்பத்தூர், மங்களபுரம், நல்லகிணறு தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (42), லோடுமேன். இவரது மனைவி மதி. இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். சுரேஷ் அடிக்கடி வேளச்சேரியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று வந்தபோது, அதே பகுதியில் வசிக்கும், கணவரை பிரிந்த மணிமாலா (34) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, கள்ளக்காதலாக மாறியுள்ளது.  கடந்த ஒரு ஆண்டாக சுரேஷ் அம்பத்தூர் அடுத்த மண்ணூர்பேட்டை, காமராஜர் நகர், 2வது தெருவில் உள்ள ஒரு வீட்டில் மணிமாலாவுடன் குடித்தனம் நடத்தி வந்துள்ளார்.

இதற்கிடையில், மணிமாலாவுக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு மணிமாலா வீட்டுக்கு சென்ற சுரேஷ், இதுபற்றி கேட்டுள்ளார். இதனால், இருவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, மணிமாலா வீட்டில் இருந்த மரக்கட்டையை எடுத்து, சுரேசை அடித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சுரேஷ் புடவையால் மணிமாலாவை கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு தலைமறைவானார். இந்நிலையில் நேற்று மதியம் சுரேஷ் அம்பத்தூர் தொழிற்பேட்டை காவல் நிலையத்தில் சரணடைந்து, போலீசாரிடம் நடந்த சம்பவத்தை கூறி அழுதுள்ளார். அம்பத்தூர் உதவி கமிஷனர் கனகராஜ் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, மணிமாலா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்கு பதிவு செய்து சுரேசை கைது செய்தனர்.

அண்ணாநகர்: சென்னை திருமங்கலம் சாந்தி காலனியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில், புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இங்கு விழுப்புரம், திருவண்ணாமலை மாவட்டத்தை  சேர்ந்த சுமார் 10க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். நேற்று முன்தினம் அப்பகுதியில், ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடப்பதாக திருமங்கலம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து கட்டுமான மேற்பார்வையாளர் மற்றும் கட்டிட தொழிலாளிகள் 6 பேரை நேற்று முன்தினம் காவல் நிலையம் அழைத்து வந்து விடிய விடிய விசாரணை நடத்தினர்.

அதில், கொலை செய்யப்பட்டவர், திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்த குமார் (எ) விஸ்வநாதன் (35) என்பது தெரிய வந்தது. மேலும், இங்கு வேலை செய்து வந்த திருவண்ணாமலை மாவட்டத்தை  ராஜா (28) மற்றும் சாந்தி (29) (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) ஆகிய இருவருக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்துள்ளது. இதுபற்றி அறிந்த குமார், சாந்திக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த ராஜாவும், சாந்தியும் நேற்று முன்தினம்  குமாரை சரமாரியாக அடித்து, உதைத்து, துண்டால் கழுத்தை இறுக்கி கொலை செய்தது தெரிய வந்தது. இதனையடுத்து, கள்ளக்காதலர்கள் இருவரையும் போலீசார் கைது செய்து எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.

முதியவர் அடித்து கொலை

துரைப்பாக்கம் பாண்டியன் நகரை சேர்ந்தவர்  மண்ணாங்கட்டி (68)  தோட்ட வேலை செய்து வந்தார். கடந்த 1ம் தேதி இவரது வீட்டில் நுழைந்த 3 பேர், அவரை சரமாரியாக தாக்கி,  பீரோவில் இருந்த 1 சவரன், ₹15 ஆயிரத்தை  கொள்ளையடித்து சென்றனர். தகவலறிந்து வந்த துரைப்பாக்கம் போலீசார், படுகாயமடைந்த  மண்ணாங்கட்டியை மீட்டு ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிந்து, கண்ணகிநகரை சேர்ந்த அருள்ராஜ் (25) மற்றும் ஒரு சிறுவனை கைது செய்தனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் நேற்று இறந்தார். இதனையடுத்து, இவ்வழக்கை கொலை வழக்காக மாற்றினர். இதில், தொடர்புடைய கண்ணகி நகரை சேர்ந்த வீராவை தேடி வருகின்றனர்.

Related Stories:

>