×

சென்னையில் இன்று அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பிடிக்க இபிஎஸ், ஓபிஎஸ் இடையே கடும் போட்டி

சென்னை: அதிமுக எம்எஎல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை சென்னையில் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார். இந்த பதவியை கைப்பற்ற இபிஎஸ், ஓபிஎஸ் இடையே  கடும் போட்டி நிலவுவதாக கூறப்படுகிறது.அதிமுக கூட்டணி தமிழகத்தில் 75 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இதில் அதிமுக வேட்பாளர்கள் மட்டும் 65 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதால், தமிழகத்தின் பிரதான எதிர்க்கட்சி என்ற அந்தஸ்தை பெற்றுள்ளது. எதிர்க்கட்சி தலைவர்  பதவியை பிடிப்பதற்கு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது இரண்டு தலைவர்களும் தங்களது சொந்த ஊரில் தங்கி இருந்து அதிமுக எம்எல்ஏக்களிடம் ரகசியமாக பேசி  வருவதாக கூறப்படுகிறது.
 
 இந்த பரபரப்பான சூழ்நிலையில் எதிர்க்கட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக கட்சி தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.  கூட்டத்துக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமை தாங்குகிறார்கள். இந்த கூட்டத்திற்கு, அதிமுக சார்பில் வெற்றிபெற்ற 65 எம்எல்ஏக்களும் பங்கேற்க  வேண்டும் என்று அழைப்பு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 இதுகுறித்து அதிமுக மூத்த நிர்வாகி ஒருவர் கூறியதாவது:

 எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் இணைந்து கட்சியை வழிநடத்தினாலும், இரண்டு பேருமே தனித்தனி அணியாகவே செயல்பட்டு வருகிறார்கள். இரண்டு பேரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை சந்தித்தால் ஒருவேளை  வெற்றி பெற்றிருக்க முடியும். கூட்டணி வியூகமும் சிறப்பாக அமையவில்லை. இன்று மாலை தேர்தல் அறிவிக்கப்படலாம் என்ற சூழ்நிலையில் ஒரு சில மணி நேரத்தில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்கப்பட்டதாக  அறிவிக்கப்பட்டது. இதனால் மற்ற சமூகத்தினர் அதிமுகவை நிராகரிக்கும் நிலை ஏற்பட்டு விட்டது. அதே நேரம் அதிக சீட் வாங்கி சென்றவர்களாலும் அதிமுக கட்சிக்கு எந்த பயனும் இல்லாமல் போய்விட்டது. இந்த நிலையில்தான் இன்று  அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.

இப்போது கூட எதிர்க்கட்சி தலைவர் பதவியை பிடிக்க இபிஎஸ்-ஓபிஎஸ் என இரண்டு பேரும் போட்டியில் உள்ளனர். தற்போதைய நிலையில், அதிமுகவில் ஒருவருக்கு ஒரு பதவி என்கிற விதியை நடைமுறைப்படுத்த வேண்டும். எதிர்க்கட்சி தலைவராக இருந்தால் கட்சியில் எந்த பதவியையும் அவர் வகிக்க கூடாது. அதேபோன்று, மாவட்ட செயலாளர் பதவி வைத்திருப்பவர்களுக்கு கட்சியில் முக்கிய பொறுப்பு எதுவும் கொடுக்க கூடாது. இதுபோன்ற விதிமுறை வகுத்து,  தொண்டர்களோடு இணைந்து செயல்பட்டால் மட்டுமே அதிமுக கட்சியை வரும் காலத்தில் காப்பாற்ற முடியும். இனியும் பதவி ஆசைக்காக கட்சியை பயன்படுத்தாமல், உண்மையாகவே எம்ஜிஆர், ஜெயலலிதாவின் விசுவாசிகளாக நடந்து,  கட்சியை காப்பாற்ற வேண்டும் என்றார்.

Tags : AIADMK ,Chennai ,EPS ,OPS ,Leader of the Opposition , AIADMK MLAs to meet in Chennai today
× RELATED “இபிஎஸ் பிரதமராக வாய்ப்புண்டு” :அதிமுக எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா பேச்சு