×

மாநிலங்களின் பொருளாதாரம் கடுமையாக பாதிப்பு; 6 மாதமாக ஜிஎஸ்டி கவுன்சிலை கூட்டாதது ஏன்?.. நிர்மலா சீதாராமனுக்கு பஞ்சாப் அமைச்சர் பகீர் கடிதம்

சண்டிகர்: மத்திய அரசு கொண்டு வந்த சரக்கு மற்றும் சேவை வரி எனப்படும் ஜிஎஸ்டி-க்குள் விற்பனை, பரிமாற்றம், கொள்முதல், பண்டமாற்று, குத்தகை, இறக்குமதி போன்ற அனைத்தும் கொண்டுவரப்பட்டுள்ளது. மத்திய மற்றும் மாநில அரசுகளால் ஜிஎஸ்டி வரியானது நிர்வகிக்கப்படுகிறது. மத்திய ஜிஎஸ்டி, மாநில ஜிஎஸ்டி, ஒருங்கிணைந்த ஜிஎஸ்டி முறையில் வரிகள் விதிக்கப்படுகின்றன. ஒவ்வொரு காலாண்டிலும் மத்திய நிதியமைச்சகத்தின் சார்பில் மாநில நிதியமைச்சர்களை அழைத்து ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை நடத்த வேண்டும் என்பது விதிமுறை. ஆனால், கடந்த 6 மாதமாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தை மத்திய அரசு கூட்டவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பஞ்சாப் நிதியமைச்சர் மன்பிரீத் சிங் பாதல், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதிய கடிதத்தில், கொரோனா நெருக்கடியால் மாநிலத்தின் பொருளாதாரம் பாதித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்படும் போதுதான், அதில் எடுக்கப்படும் முடிவுகளின் அடிப்படையில் மாநிலங்களுக்கு உரிமைகள் வழங்கப்பட உள்ளன. ஆனால் கடந்த ஆறு மாதங்களாக ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடத்தப்படவில்லை. அதிகாரிகளின் குழு அல்லது ஜிஎஸ்டி அமலாக்கக் குழுவிற்கு அதிகாரத்தை வழங்குவது என்பது, சாதாரண விஷயங்களுக்காகவும், குறைந்தப்பட்ச மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக மட்டும் அல்ல.

மத்திய அரசின் இந்த நடவடிக்கையால், நாங்கள் ஏமாற்றப்பட்டதாக உணர்கிறோம். சிக்கலான இந்த நேரத்தில் மாநிலங்களுடன் எந்தவொரு ஆக்கபூர்வமான ஆலோசனையையும் மத்திய அரசு நடத்தவில்லை. கூட்டாட்சி தத்துவத்தை மத்திய அரசு கைப்பற்றியுள்ளதா? என்பது, எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. ஜிஎஸ்டி அமல்படுத்தப்பட்ட ஐந்து ஆண்டுகளில், மாநில நிதி அமைச்சர்களால் தேர்வு செய்யப்பட்ட துணைத் தலைவரை நியமிக்க வேண்டும். ஆனால், இதுவரை துணை தலைவரை தேர்வு செய்யவில்லை. பல்வேறு மாநிலங்களின் இந்த கோரிக்கையை வைத்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கவில்லை.

ஜிஎஸ்டி அமலாக்க அதிகாரிகள், மாநில அரசுகளிடம் அறிவிக்காமல் கட்டாய வரி வசூலை நடத்துகின்றனர். கைது அச்சுறுத்தல்கள், உற்பத்தி சொத்துக்களை முடக்குதல், வங்கிக் கணக்குகளை முடக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். எனவே, ஜிஎஸ்டி விதிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டிய அவசியம். தற்போதைய ஜிஎஸ்டி சட்டத்தில் குழப்பங்கள் உள்ளதால், வழக்குகளின் எண்ணிக்கை பலமடங்கு அதிகரித்துள்ளது என்று அதில் தெரிவித்துள்ளார்.



Tags : GST Council ,Punjab Minister Bhakir ,Nirmala Sitharaman , GST
× RELATED பெண்களை முன்னிறுத்தி பல திட்டங்களை...