×

அமைச்சகங்கள், துறைகளின் பெயர் மாற்றம்: மு.க.ஸ்டாலின்

சென்னை: தமிழகத்தின் நீர்த் தேவையை நிறைவுசெய்யும் பொருட்டு உண்டாக்கப்படும் தனி அமைச்சகம் ‘நீர்வளத் துறை’ என்று அழைக்கப்படும் என முதல்வராக பதவியேற்க உள்ள மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். தொழிலாளர் நலத்துறையின் செயல்பாடுகள் காலப்போக்கில் மாறி இன்று திறன்களை மேம்படுத்த வேண்டிய கட்டாயத்தையும் உள்ளடக்கியதாக இருக்கிறது. எனவே அத்துறை ‘தொழிலாளர் நலன் - திறன் மேம்பாட்டுத் துறை’ என்று பெயரிடப்படுகிறது. சமூக நலத்துறை என்பது பெண்களுக்கு உரிமை வழங்குகிற பல்வேறு செயல்பாடுகளை உள்ளடக்கிய துறை. எனவே அந்தத் திக்கில் செயல்படும் பொருட்டும் திட்டங்களைத் தீட்டும் நோக்கத்திலும் ‘சமூக நலன் - மகளிர் உரிமைத் துறை’  என்று வழங்கப்படவுள்ளது. மீனவர்கள் நலமில்லாமல் மீன்வளத்தைப் பெருக்கி பயனில்லை என்பதாலும், மீனவர்களுடைய நல வாழ்விற்கான திட்டங்களை வடிவமைத்துச் செயல்படுத்த வேண்டும் என்கிற அடிப்படையாலும் மீன்வளத்துறை ‘மீன்வளம் - மீனவர் நலத் துறை’ என்று அழைக்கப்படுகிறது. மக்கள் நல்வாழ்வுத் துறை என்பது மருத்துவத்தையும் உள்ளடக்கியது என்பதாலும், சுகாதாரம் என்பது துப்புரவை மட்டுமே குறிப்பது என்பதாலும் அத்துறைக்குப் பரந்துபட்ட நோக்கத்தில் ‘மருத்துவம் - மக்கள் நல்வாழ்வுத் துறை’ என்று பெயர் சூட்டப்படுகிறது. சுற்றுச்சூழல் துறை ‘சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை’ என்று பெயர்மாற்றம்; காலநிலை மாற்றத்தினால் ஏற்படக்கூடிய சுற்றுச்சூழல் தொடர்பான எச்சரிக்கை, நடவடிக்கை, விழிப்புணர்வு பரப்புரைகளையும், கட்டமைப்புகளையும் இது செயல்படுத்தும். தங்குதடையின்றி உழவர்களுக்கு நீர் கிடைப்பதற்கும், நிலத்தடி நீரை விருத்தி செய்வதற்கும், நீர்நிலைகளைத் தூர்வாரி பராமரிப்பதற்கும், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கும் முக்கியத் துறையாகச் நீர்வளத்துறை செயல்படும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Tags : Q. Stalin , Name change of ministries and departments: MK Stalin
× RELATED கனமழையால் பாதிக்கப்பட்ட கொளத்தூர் பகுதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு