மீண்டும் ஐபிஎல்லை நடத்துவது பற்றி விரைவில் அறிவிப்போம்: பிசிசிஐ தலைவர் கங்குலி பேட்டி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐ தலைவருமான சவ்ரவ் கங்குலி அளித்துள்ள பேட்டி: இந்தியாவில் இந்த ஆண்டு ஐபிஎல் தொடரை நடத்த ஏற்பாடு செய்தது தவறு இல்லை. ஏனெனில் அதற்கு முன் இங்கிலாந்து தொடரை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். கடந்த முறை போல் இந்த முறையும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த விவாதிக்கப்பட்டது. ஆனால் பிப்ரவரியில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இல்லை. அதன்பின் 3 வாரம் வேகமாக பரவி விட்டது. மீண்டும் ஐபிஎல்லை நடத்துவது பற்றி விரைவில் அறிவிப்போம். யுஏஇயில் நடத்தப்படுமா என்பது பற்றி எதுவும் சொல்ல முடியாது, என்றார்.

6 நகரங்களை விட ஒன்று அல்லது 2 நகரங்களில் ஐபிஎல் போட்டியை நடத்துவது சிறப்பாக இருந்திருக்குமா என்ற கேள்விக்கு, நாங்கள் அட்டவணையை தயாரித்தபோது இந்தியாவில் கொரோனா தீவிரம் இல்லை, என்றார். மேலும் வெளிநாட்டு வீரர்கள் அனைவரும் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்படுவார்கள். ஆஸி. வீரர்கள் இன்று மாலத்தீவு சென்று தங்கள் தனிமைப்படுத்தலை முடித்துவிட்டு ஆஸி. திரும்புவார்கள். இதில் எந்தசிக்கலும் இல்லை, என்றார். உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டிக்கு இங்கிலாந்து செல்வதற்கு முன் இந்திய வீரர்களுக்கு தடுப்பூசி போடுவதற்கு ஏதேனும் திட்டம் உள்ளதா? என்ற கேள்விக்கு. இப்போது அவர்களுக்கு நேரம் இருப்பதால் அந்தந்த மாநில அரசுகளின் வழிகாட்டுதல் படி தடுப்பூசி போட்டுக்கொள்வார்கள், என்றார்.

ரஞ்சி சீசன் ஒத்திவைக்கப்பட்டுள்ளதால் உள்நாட்டு வீரர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும். டி.20 உலக கோப்பையை ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றுவது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்படும். கொரோனா பாதிப்பிற்கு மத்தியில் ஐபிஎல் தொடர் நடத்தியது பற்றி விமர்சனங்கள் எழுந்துள்ளது பற்றிய கேள்விக்கு, ஐபிஎல் மட்டுமல்ல இங்கிலாந்து பிரிமியர் லீக், லிகா என உலகம் முழுவதும் லீக் போட்டிகள் நடந்து கொண்டிருக்கிறது என்ற கங்குலி, கொரோனா நிவாரணத்திற்காக கடந்த ஆண்டு 51 கோடி ரூபாய் வழங்கினோம். இந்த ஆண்டு நிவாரண நிதி வழங்கப்படும், என்றார்.

Related Stories: