நெல்லை அரசு மருத்துவ கல்லூரிக்கு மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து 8,000 லிட்டர் ஆக்சிஜன்

நெல்லை: நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு மகேந்திரகிரி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து 8,000 லிட்டர் திரவ ஆக்சிஜன் அனுப்பப்பட்டுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் கடந்த 2 நாட்களாக ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து நெல்லை மாவட்டம் மகேந்திரகிரியில் உள்ள விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து இன்று அவசரமாக 8,000 லிட்டர் திரவ ஆக்சிஜன் நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்குள்ள சேமிப்பு கிடங்கில் சேமித்து வைக்கப்பட்டுள்ளது.

நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா சிகிச்சைக்காக அமைக்கப்பட்டுள்ள 13,000 கிலோ லிட்டர் கொள்ளளவுள்ள திரவ ஆக்சிஜன் சேமிப்பு கிடங்கிலும், அதே வளாகத்தில் உள்ள 6,000 லிட்டர் கொள்ளளவுள்ள மற்றொரு சேமிப்பு கிடங்கிலும் இவைகள் நிரப்பப்பட்டுள்ளன. நெல்லை மாவட்ட அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 800 ஆக்சிஜன் படுக்கைகளுடன் 1,240 படுக்கைகள் உள்ளன. கடந்த சில நாட்களாக நெல்லை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வந்ததால் அனைத்து படுக்கைகளும் மருத்துக்கல்லூரியில் நிரம்பியுள்ளன.

மேலும் நெல்லை மாவட்டத்தில் 11 தனியார் மருத்துவமனைகளில் சுமார் 450 படுக்கை வசதிகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்த நிலையில் கடந்த 2 நாட்களாக இந்த 11 தனியார் மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு புதிய கொரோனா நோயாளிகளை சிகிச்சைக்காக அனுமதிப்பதில்லை. இதனால் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

Related Stories:

More