×

முழு பாலையும் கறக்காவிட்டால் மாடுகளுக்கு மடி நோய் ஏற்படும்: கால்நடை மருத்துவ ஆராய்ச்சி மையம் தகவல்

திண்டுக்கல்: மாடுகளுக்கு முழு பாலையும் கறக்காவிட்டால் மடி நோய் ஏற்படும் என திண்டுக்கல் கால்நடை மருத்துவ மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து திண்டுக்கல் கால்நடை மருத்துவ பல்கலைக்கழக ஆராய்ச்சி மைய உதவி பேராசிரியர் டாக்டர் தாஸ்பிரகாஷ் கூறியதாவது: பால் இன்றியமையாத, ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாகும். சுகாதாரமான முறையில் உற்பத்தி செய்யப்படும் பால் நுகர்வோருக்கு நன்மை அளிக்கிறது. சுத்தமான பால் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும். சுகாதாரமற்ற சூழலில் உற்பத்தி செய்யப்படும் பால் வெகு விரைவில் கெட்டு போய்விடும்.

கெட்டு போன பாலால் காசநோய், தொண்டைப்புண், டிப்தீரியா, டைபாயிடு, வயிற்றுப்போக்கு போன்ற நோய்கள் பரவ வாய்ப்புள்ளது. சுத்தமான பால் உற்பத்தி செய்ய சீரான பால் கறவை முறைகளை கையாள வேண்டும். பால் கறக்கும் போது மிக கவனமாகவும், அமைதியாகவும், விரைவாகவும் இருக்க வேண்டும். அதே சமயம் மடியில் உள்ள முழுப்பால் முழுவதையும் கறக்க வேண்டும். மாடுகளின் மடியில் பால் தங்குவதால் மடி நோய் ஏற்பட ஏதுவாக அமையும். இரைச்சல், அச்சுறுத்தல், குச்சிகளால் தாக்குதல் போன்ற செயல்களால் பால் சுரப்பு நின்று விடும். கறவை பசுக்களை கையாளும் ஆட்கள் மாறுவதால் பாலின் அளவு திடீரென்று குறைய வாய்ப்புள்ளது. அனைத்து விரல்களையும் பயன்படுத்தி பால் கறக்க வேண்டும்.

பெரிய காம்புகள் கொண்ட பசுக்கள், எருமைகளில் இம்முறையை பயன்படுத்திப் பால் கறப்பது சிறந்தது. மேலும் பாலில் கிருமி தொற்று ஏற்படாமல் இருக்க, மாடுகளின் உடலில் உள்ள கிருமிகள், ரோமம், மண், சாணம், வைக்கோல் போன்றவை பாலில் கலந்து விடாமல் பார்த்து கொள்ள வேண்டும். பால் கறக்கும் முன்பு, மாடுகளை நன்றாக கழுவி குளிப்பாட்ட வேண்டும். பால் கறக்கும் இடத்தை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பால் கறப்பவர் சுத்தமாக இருக்க வேண்டும். பால் கறப்பவர் காசநோய், டிப்தீரியா, டைபாயிடு போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தால், அவரது தும்மல் அல்லது சளி மூலம் நோய்க்கிருமிகள் பாலை மாசுப்படுத்தும். இதன்மூலம் பாலை அருந்துபவர்களுக்கும், பசுக்களுக்கும் நோய் பரவ வாய்ப்புகள் உண்டு. பால் பாத்திரங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். பால் கறப்பதற்கு என உள்ள பாத்திரங்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Tags : Veterinary Medical Research Center , Veterinary Research
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...