×

ஆந்திராவில் ஊரடங்கால் பயணிகள் நடந்தே சென்றனர்: வேலூர்- திருப்பதி செல்லும் தமிழக பஸ்கள் நிறுத்தம்

வேலூர்: வேலூர்- திருப்பதி செல்லும் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டது. மேலும் 12 மணிக்கு மேல் சென்ற வாகனங்களை போலீசார் தடுத்து திருப்பி அனுப்பினர். பஸ்சில் பயணம் செய்த பயணிகள் நடந்தே ஊருக்கு சென்றனர். இந்தியாவில் கொரோனாவின் 2வது அலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். தினசரி பலி எண்ணிக்கையும் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆந்திராவில் கொரோனா பரவலை தடுக்க மாநிலம் முழுவதும் நேற்று முதல் அடுத்த 14 நாட்களுக்கு நண்பகல் 12 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. காலை 6 மணி முதல் நண்பகல் 12 மணி வரை வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்படுகிறது. இதனால் ஆந்திராவில் இருந்து தமிழகம், புதுச்சேரி, கர்நாடகம் போன்ற மாநிலங்களுக்கு செல்லும் ஆந்திர பஸ்கள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன. இதேபோன்று விழுப்புரம் கோட்டம், வேலூர் போக்குவரத்து மண்டலத்தில் இருந்து ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி, காளஹஸ்தி, மதனப்பல்லி உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் 35 தமிழக பஸ்கள் நேற்று முதல் நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசு போக்குவரத்துத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘ஆந்திராவில் ஊரடங்கு அமலில் உள்ளதால் அம்மாநில அரசு பஸ்கள் வெளிமாநிலத்திற்கு செல்வது நிறுத்தப்பட்டுள்ளது. இதேபோன்று வேலூர் மண்டலம் மற்றும் விழுப்புரம் கோட்டத்திற்குட்பட்ட 35 அரசு பஸ்களும் நிறுத்தப்பட்டுள்ளது’ என்றனர்.

இதற்கிடையே நேற்று வேலூரில் இருந்து சித்தூருக்கு தனியார் பஸ்கள் இயக்கப்பட்டது. அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வேலூரில் இருந்து சித்தூருக்கு இயக்கப்பட்ட தனியார் பஸ்சில் 50க்கும் மேற்பட்டவர்கள் நேற்று பயணித்தனர். ஆனால் மதியம் 12.30 மணியளவில் காட்பாடி அருகே மாநில எல்லையான கிறிஸ்டியான்பேட்டை வழியாக ஆந்திரா செல்ல முயன்ற தனியார் பஸ்சை, அம்மாநில போலீசார் தடுத்து நிறுத்தினர். அப்போது பகல் 12 மணி வரை மட்டுமே பஸ்கள் செல்ல முடியும் எனக்கூறி பஸ்சை திரும்பி எடுத்துச் செல்லும்படி கூறினர். இதனால் பஸ்சில் இருந்தவர்களுக்கு டிக்கெட்டிற்கான பணத்தை திருப்பி கொடுத்து பயணிகளை  இறக்கி விட்டனர். பின்னர் பஸ் வேலூர் நோக்கி சென்றது. பஸ்சில் பயணம் செய்தவர்கள் இறங்கி நடந்தே சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

Tags : Andhra ,TN ,Valur-Tirupati , Andhra, Tamil Nadu buses, stop
× RELATED ஆந்திர முதல்வர் மீது கல்வீச்சு: துப்பு கொடுத்தால் சன்மானம்