×

வேலூர் மாநகராட்சி 13 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சதுப்பேரியில் குப்பை தரம் பிரிக்கும் இயந்திரம் பழுது: பணிகள் நிறுத்திவைப்பு

வேலூர்: வேலூர் மாநகராட்சி 13 கோடியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் சதுப்பேரி குப்பை தரம் பிரிக்கும் இயந்திரம் பழுதாகியுள்ளதால் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 13 கோடியில் சதுப்பேரி குப்பை தரம் பிரிக்கும் பணிகள் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 16ம் தேதி தொடங்கியது. இதற்காக பின்லாந்தில் இருந்து கப்பல் மூலமாக நவீன இயந்திரம் சென்னை கொண்டுவரப்பட்டு, அங்கிருந்து 6 கண்டெய்னர் லாரிகளில் வேலூர் கொண்டுவரப்பட்டது.

இயந்திரம் பொருத்த ஒரு மாதகாலம் ஆனது. அதன்பின்னர் தான் பணிகள் தொடங்கியது. இந்த இயந்திரம் மூலம் மணல், சிறிய கற்கள், கண்ணாடி, பிளாஸ்டிக் உட்பட 19 வகையான பொருட்கள் தரம் பிரிக்கப்படுகிறது. இந்நிலையில் சதுப்பேரி குப்பை கிடங்கில் குப்பை தரம் பிரிக்கும் இயந்திரம் திடீரென பழுதாகியுள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக குப்பை தரம் பிரிக்கும் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநகராட்சி பொறியாளர் சீனிவாசனிடம் கேட்டபோது, ‘வேலூர் சதுப்பேரியில் குப்பை தரம் பிரிக்கும் இயந்திரம் பழுதாகியுள்ளது. அதற்கான உதிரி பாகம் வந்தவுடன் உடனடியாக பணிகள் தொடங்கப்படும். 2 நாட்களாகதான் பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது’ என்றார்.


Tags : Valor Municipality , Vellore Corporation
× RELATED வேலூர் மாநகராட்சி 2வது மண்டலத்தில் ஒரே...