பூலாம்பட்டி கதவணை மின்நிலையத்தில் பராமரிப்பு: காவிரியில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தம்: குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுப்பதில் சிக்கல்

இடைப்பாடி: பூலாம்பட்டி கதவணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் துவங்கியுள்ள நிலையில், காவிரியில் விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மேலும், கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளதால் வழியோரம் அடுத்தடுத்து உள்ள கதவணை மின்நிலையங்களில் பராமரிப்பு பணி முடுக்கி விடப்பட்டுள்ளது. இதனையொட்டி, மின் உற்பத்திக்காக காவிரியில் தேக்கி வைக்கப்பட்டிருக்கும் தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதன்படி, பூலாம்பட்டி-நெரிஞ்சிப்பேட்டை கதவணை நீர் மின்நிலைய பராமரிப்பு பணிக்காக நேற்று தண்ணீர் முழுவதும் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால், விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளதுடன், மின் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுப்பதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. நேற்று துவங்கிய பராமரிப்பு பணி 20 நாட்கள் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், காவிரியில் நீரோட்டம் குறைந்துள்ளதால் பூலாம்பட்டி- ஈரோடு மாவட்டத்திற்கிடையே விசைப்படகு போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால், டூவீலர்களில் பல கி.மீ. சுற்றி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், பூலாம்பட்டி காவிரியில் இருந்து இடைப்பாடி நகராட்சி கூட்டு குடிநீர் திட்டம், இரும்பாலை கூட்டு குடிநீர் திட்டம், ராசிபுரம் கூட்டு குடிநீர் திட்டம் ஆகிய கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு தண்ணீர் எடுக்கப்பட்டு வருகிறது.

தற்போது, கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் தண்ணீர் தேவை அதிகரித்துள்ள நிலையில், கதவணை மின்நிலையம் பராமரிப்பு பணியால் கூட்டு குடிநீர் திட்டங்களுக்கு போதிய அளவில் தண்ணீர் கிடைகாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கடும் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புள்ளது. பூலாம்பட்டி காவிரியில் தண்ணீர் வற்றியதால் சேறும் சகதியுமாக குட்டைபோல் மாறியுள்ளது. சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்தவர்கள் கூட்டம் கூட்டமாக வந்து மீன்களை பிடித்துச் சென்றனர்.

குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல

பூலாம்பட்டி காவிரி ஆற்றிலிருந்து இடைப்பாடி நகராட்சிக்கு  கூட்டு குடிநீர் திட்டம் மூலமாக  குடிநீர் ஏற்றப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பூலாம்பட்டி-நெரிஞ்சிப்பேட்டை கதவணை மின்நிலைய பராமரிப்பு பணிக்காக காவிரியில் தேக்கி வைக்கப்பட்டிருந்த தண்ணீர் வெளியேற்றப்பட்டதால், மோட்டார் வைத்து  தண்ணீர் எடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் வழக்கம்போல் தண்ணீர் கிடைக்க வழிவகை செய்யப்படும். இருப்பு குறைவால் தண்ணீர் கலங்கலாக வரும்போது பொதுமக்கள் காய்ச்சி குடிக்குமாறு நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) பழனியப்பன் தெரிவித்துள்ளார்.மேலும், தண்ணீரை சிக்கனமாக  பயன்படுத்திக் கொள்ளுமாறும், மின் மோட்டார் வைத்து தண்ணீர் உறிஞ்சுவது  கண்டுபிடிக்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories:

>