×

ஒகேனக்கல் அருவியில் தடையை மீறி குளித்த சுற்றுலா பயணிகள்: மாவட்ட நிர்வாகம் தடுக்க வலியுறுத்தல்

பென்னாகரம்: கொரோனா பரவலை அடுத்து, ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வர தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் நேற்று தடையை மீறி அருவியில் சிலர் குளித்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல்லுக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் தவிர, கர்நாடகா, ஆந்திரா, கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். விடுமுறை மற்றும் பண்டிகை நாட்களில் குடும்பத்துடன் வரும் அவர்கள், அருவியில் குளித்தும், பரிசல் சவாரி செய்தும் மகிழ்வார்.

இந்நிலையில்  கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், கடந்த மாதம் 20ம் தேதி முதல் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் வருவதற்கு, மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை குறைந்து வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் தடையை மீறி ஒகேனக்கலுக்கு வரும் சுற்றுலா பயணிகள், மெயின் அருவி, சினி பால்ஸ் உள்ளிட்ட அருவிகளுக்கு சென்று குளித்து வருகின்றனர். மேலும் வெளியூரில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளுக்கு, தங்குமிடம் மற்றும் உணவு வசதி செய்து தரப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனால் கொரோனா தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக உள்ளூர்வாசிகள் குற்றம் சாட்டி வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் ஆலம்பாடி, மடம் செக்போஸ்ட் உள்ளிட்ட பகுதிகளில் பாதுகாப்பை அதிகப்படுத்தி வெளியூர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வருவதை தடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : Okanagan Falls ,District Administration , OkanagaL Falls
× RELATED நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் போலீசார் தபால் வாக்கு செலுத்தினர்