×

ஓசூர் வனப்பகுதியில் வனவிலங்குகளுக்காக தொட்டிகளில் தண்ணீர்: வனத்துறையினர் நடவடிக்கை

ஓசூர்: ஓசூர் சானமாவு வனப்பகுதியில் வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர், தேன்கனிக்கோட்டை, ஜவளகிரி, சூளகிரி, கெலமங்கலம் ஆகிய பகுதிகள் 5143 ச.கி.மீட்டரில் அடர்ந்த வனப்பகுதியாக உள்ளது. அதில் ஓசூர் வனக்கோட்டமானது, காப்புக்காடுகளுடன் 1501 ச.கி.மீட்டர் வனப்பரப்பளவைக் கொண்டுள்ளது. மாவட்டத்தின் மொத்த பரப்பளவில் 29 சதவீதம் வனப்பகுதி ஆகும். இவ்வனப்பகுதியில் 504 ச.கி.மீட்டர் பரப்பளவு 2014ம் ஆண்டு முதல் காவேரி வடக்கு வன உயிரின சரணாலயமாக அறிவிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இவ்வனப்பகுதிகளில் அரியவகை தாவரங்களான சந்தனம், உசில், தேக்கு, ஈட்டி, குங்கிலியம், பொரசு மற்றும் இதர மர வகைகள் உள்ளன. இதேபோல் யானை, சிறுத்தை, கரடி, காட்டெருமை, புள்ளிமான் போன்ற வன விலங்குகள் ஏராளமாக உள்ளது.

இந்நிலையில், தற்போது கோடை காலம் துவங்கி இருப்பதால் சானமாவு வனப்பகுதியில் வனவிலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் தேவை அதிகரித்துள்ளது. இதை கருத்தில் கொண்டு வனத்துறையினர் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்பி வந்தனர். தற்போது 3வது முறையாக 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து வனச்சரகர் ரவி கூறுகையில், சானமாவு வனப்பகுதியில் 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தண்ணீர் தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. வனப்பகுதியையொட்டி, தென்பெண்ணை ஆறும், ஏரிகள், குட்டைகள் இருந்தாலும் 1.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட 2 தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் தொடர்ந்து நிரப்பப்படும். கோடை காலம் முடியும் வரை தண்ணீர் நிரப்பும் பணி தொடர்ந்து நடைபெறும் என்றார்.


Tags : Oshur , Hosur, Forest Department
× RELATED ஓசூரில் நடந்த இரட்டை கொலை: 5 பேர் பாலக்கோடு நீதிமன்றத்தில் சரண்