×

வடமாநிலங்களில் முழு ஊரடங்கு எதிரொலி கோவை, திருப்பூரில் 300 கோடி ஜவுளி தேக்கம்: விசைத்தறி தொழில் முடங்கியது

சோமனூர்: கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2.5 லட்சம் விசைத்தறிகள் இயங்கி வருகின்றன. விசைத்தறி கூடங்களில் மட்டும் 5 லட்சம் தொழிலாளர்கள் நேரடியாக பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விசைத்தறி தொழில் சார்ந்த பஞ்சாலைகள், நூற்பாலைகள், உதிரிபாகங்கள் தயாரிக்கும் தொழிற்கூடங்களில் பல லட்சம் தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர். தற்போது இந்தியாவில் கொரோனா வைரஸ் 2ம் அலை வேகமாக பரவி வருவதால் அனைத்து வர்த்தகமும், தொழில் நிறுவனங்களும் மீண்டும் முடங்கி வருகிறது. வடமாநிலங்களில் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவை மற்றும் திருப்பூர் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்பட்ட ரூ.300 கோடி மதிப்பிலான ஜவுளிகள் தேங்கியுள்ளன. இதனால் ஜவுளி உற்பத்தியாளர்களும், விசைத்தறியாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். தேக்கம் காரணமாக ஜவுளி உற்பத்தியாளர்கள் உற்பத்தியை படிப்படியாக குறைத்து வருகின்றனர்.

விசைத்தறியாளர்களுக்கு வழங்கும் பாவு மற்றும் நூல்களும் குறைக்கப்பட்டன. இதனால் விசைத்தறி தொழிலை நம்பி வாழும் தொழிலாளர்கள் படிப்படியாக வேலையிழந்து வருகின்றனர். கோவை திருப்பூர் மாவட்டத்தில்  உற்பத்தியாகும் கிரேகாடா காட்டன் துணி இந்தியாவில் மகாராஷ்டிரா, பாலி, பலோத்ரா, ஜெய்ப்பூர், அகமதாபாத், டெல்லி, மும்பை, கொல்கத்தா, புனே, மற்றும் தமிழ்நாட்டில் ஈரோடு, கரூர் ஆகிய பகுதிகளில் விற்பனை செய்யப்படுகின்றன. தூத்துக்குடி துறைமுகம் வழியே வெளிநாடுகளுக்கும் ஜவுளி ஏற்றுமதி நடைபெற்று வந்தது. வட மாநிலங்களின் பல்வேறு பகுதிகளில் கொேரானா வைரஸ் தாக்கம் அதிகரித்ததால் அங்கு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் அங்கு துணிகள் விற்பனையாவதில்லை. ஒரு சில வியாபாரிகள் துணி விலையை குறைத்து கேட்கின்றனர். எனவே ஒரு மாதமாக மொத்த வியாபாரிகள் படிப்படியாக குறைந்த அளவு துணியை மட்டுமே வாங்கினர்.

சில இடங்களில் கடந்த இரு வாரமாக ஜவுளி வாங்குவதை முழுமையாக குறைத்து விட்டனர். கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சுமார் 20 கோடி மீட்டர் கிரே காடா துணி விற்பனையாகாமல் தேங்கியுள்ளது. இதனால் விசைத்தறியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து சோமனூர் பகுதியில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் கூறுகையில், ‘‘இந்தியாவில் கொரானா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளதால், வட மாநிலங்களில் இருந்து ஜவுளி வாங்க யாரும் முன்வரவில்லை. இதனால் முழுமையாக விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது. பணப்புழக்கமும் தடைபட்டுள்ளது. விசைத்தறியாளர்களுக்கு சம்பளம் வழங்கவும், வங்கி கடன் செலுத்தவும்,  வாடகை, உற்பத்தி செலவினங்கள், தொழில்வரி கட்டுவது உள்ளிட்ட செலவினங்களை செய்வதற்கு மிகவும் கஷ்டப்பட்டு வருகின்றோம்’’ என்றார்.

ஜவுளி உற்பத்தியை முழுமையாக குறைப்பதற்காக விசைத்தறியாளர்களுக்கு வழங்கும் பாவு நூல்கள் படிப்படியாக நிறுத்தப்பட்டு வருவதால் கோவை, திருப்பூர் மாவட்டத்தில் படிப்படியாக விசைத்தறிக்கூடங்கள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் விசைத்தறி தொழிலை நம்பி வாழும் பல லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

Tags : Coimbatore, ,Tirupur , 300 crore textile stagnation in Coimbatore, Tirupur: Power loom industry paralyzed
× RELATED தமிழ்நாட்டின் கவனத்தை ஈர்க்கும் கோவை...