இந்தியாவில் கொரோனா பலி இன்னும் 4 வாரத்தில் 4 லட்சமாக அதிகரிக்கும்: நிபுணர்கள் எச்சரிக்கை

புதுடெல்லி: கொரோனா 2வது அலை தீவிரமாக இருக்கும் நிலையில், இன்னும் 4 வாரங்களில் மொத்த பலி 4 லட்சத்தை தாண்டும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர். கொரோனா 2வது அலை நாளுக்கு நாள் மோசமைடந்து வருகிறது. கடந்த 13 நாட்களுக்காக தினசரி பாதிப்பு 4 லட்சத்துக்கு சற்று குறைவாக பதிவாகி வருகிறது. பலி எண்ணிக்கையும் 3 ஆயிரத்துக்கு அதிகமாக பதிவாகி வருகிறது. 2வது அலை உச்சமடைந்துள்ள நிலையில், அடுத்த 4 வாரம் மிக மிக சவாலானது என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். பெங்களூர் ஐஐடியை சேர்ந்த குழுவினர் கணிதமுறைப்படி கொரோனா இறப்பு விகிதத்தை கணித்துள்ளனர். அதன்படி, தற்போதுள்ள நிலை நீடித்தால் ஜூன் 11ம் தேதி நாட்டின் மொத்த பலி 4 லட்சத்து 4 ஆயிரமாக அதிகரிக்கும் என கூறப்பட்டுள்ளது. வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடு இன்ஸ்டிடியூட் தனது கணிப்பில் இந்தியாவில் ஜூலை மாதம் கொரோனா பலி 10 லட்சத்து 18 ஆயிரத்து 879 ஆக அதிகரித்திருக்கும் என கூறி உள்ளது.

பிரவுன் யூனிவர்சிட்டி ஸ்கூல் ஆப் பப்ளிக் ஹெல்த் டீன் ஆஷிஷ் ஷா கூறுகையில், ‘‘இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள நாடுகளில் கொரோனா பாதிப்பை கணிப்பது கடினமான காரியம். ஆனாலும் தற்போதைய சூழலில் இந்தியாவில் பரிசோதனைகள் அதிகரிப்பது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. அடுத்த 4 அல்லது 6 வாரங்கள் இந்தியாவுக்கு மிக மிக மோசமான வாரங்களாகும். அடுத்த 6 அல்லது 8 வாரத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு முடியுமோ அந்தளவுக்கு பாதிப்பை மோசமாகாமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார். ஜான் ஹாப்கின்சனின் மூத்த நிபுணர் ஜெனிபர் நுஸ்ஸோ கூறுகையில், ‘‘இந்தியாவில் தற்போது தினசரி கிட்டத்தட்ட 4 லட்சம் பேர் பாதிக்கப்படுகின்றனர். ஆனால் இந்த எண்ணிக்கை துல்லியமானது என்று கூறி விட முடியாது. இதில் விடுபட்ட பலர் கொரோனாவுடன் பொது இடங்களில் நடமாடிக் கொண்டிருக்கலாம். சில மாநிலங்களில் மொத்த மக்கள் தொகையில் 40 சதவீதம் பேருக்கு கூட பாதிப்பு இருக்கிறது. இதில் பயப்பட வேண்டிய விஷயம் பரிசோதனை செய்யாமல் தப்பியவர்கள் பற்றிதான்’’ என்றார்.

எனவே ஊடரங்கு தற்போதைய நிலையில் அவசியம் என நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர். இண்டியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்ஸ் தனது கணிப்பில் 15 நாட்கள் முழு ஊரடங்கை அமல்படுத்தினால், பலி எண்ணிக்கையை 3 லட்சமாகவும், 30 நாள் ஊரடங்கை விதித்தால் 2.85 லட்சமாகவும் குறைக்கலாம் என கூறி உள்ளது. அதே சமயம் ஜூலையில் உலக அளவில் பலி எண்ணிக்கை குறைந்தபட்சம் 9 லட்சத்து 40 ஆயிரமாக இருக்கும் என ஆய்வு முடிவுகள் கூறி உள்ளன. தடுப்பூசியே மக்களின் உயிரை காக்கும் முக்கிய சக்தியாக இருந்தாலும், அதன் மூலம் நோய் எதிர்ப்பு கிடைப்பதற்கு நாட்கள் ஆகின்றன. எனவே, மாஸ்க் அணிதல், சமூக இடைவெளியை கடைபிடித்தல், பொது இடங்களுக்கு செல்வதை கூடுமான வரை தவிர்த்தல் போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மக்கள் அவசியம் கடைபிடிக்க வேண்டும் என கூறும் ஆய்வாளர்கள் கொரோனா வைரஸ் எப்படி திடீரென அதிகரிக்கிறது, அதன் பரவல் தீவிரமடைய காரணம் என்ன என்பதை பற்றி எல்லாம் இன்னும் முழுமையாக புரிந்து கொள்ள முடியவில்லை என கூறி உள்ளனர்.

ஒரேநாளில் 3,780 பேர் பலி

* கொரோனா பாதிப்பால் நேற்று ஒரே நாளில் நாடு முழுவதும் 3,780 பேர் பலியாகி உள்ளனர். இதுவே தினசரி பலியில் அதிகபட்சமாகும். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 2 லட்சத்து 26 ஆயிரத்து 188 ஆக அதிகரித்துள்ளது.

* கடந்த 24 மணி நேரத்தில் நாடு முழுவதும் 3 லட்சத்து 82 ஆயிரத்து 315 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 2 நாட்களாக பாதிப்பு எண்ணிக்கை குறைந்து வந்த நிலையில், நேற்று சற்று அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்பு 2 கோடியே 6 லட்சத்து 65 ஆயிரத்து 148 ஆக அதிகரித்துள்ளது

* சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 34 லட்சத்து 87 ஆயிரத்து 229 ஆக அதிகரித்துள்ளது.

* நேற்று ஒரே நாளில் 3 லட்சத்து 38 ஆயிரத்து 439 பேர் குணமடைந்துள்ளனர். மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 1 கோடியே 69 லட்சத்து 51 ஆயிரத்து 731 ஆக அதிகரித்துள்ளது.

* உலகிலேயே அதிகபட்சமாக அமெரிக்காவில் 5 லட்சத்து 78 ஆயிரத்து 500 பேர் பலியாகி உள்ளனர். பிரேசிலில் 4 லட்சத்து 11 ஆயிரத்து 588 பேர் இறந்துள்ளனர். 2 லட்சத்து 26 ஆயிரத்து 188 பலியுடன் இந்தியா 3வது இடத்தில் உள்ளது.

கோபம், மன அழுத்தத்தில் 61% இந்தியர்கள் உள்ளனர்

கொரோனா 2வது அலையில் பலி எண்ணிக்கை அதிகரிப்பதாகவும், ஆக்சிஜன், மருத்துவமனைகளில் இடமின்றி மக்கள் தவிப்பதாகவும் தினசரி பல்வேறு செய்திகள் வருகின்றனர். இந்நிலையில், மக்களின் மனநிலை தொடர்பான ஆய்வு முடிவு ஒன்று தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், 61 சதவீத இந்தியர்கள் கோபம், அதிருப்தி, மனநெருக்கடி, கவலையில் ஆழ்ந்திருப்பதாக கூறி உள்ளனர். இந்தியா கொரோனாவை முறையாக கையாளவில்லை என 45 சதவீதம் பேரும், சரியான பாதையில் செல்வதாக 41 சதவீதம் பேரும் கூறி உள்ளனர்.

Related Stories:

>