சென்னை சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் கூட்டம் 7ம் தேதி நடக்கிறது: கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. முதல்வராக மு.க.ஸ்டாலின் தனிப் பெரும்பான்மையுடன் பொறுப்பேற்க உள்ளார். திமுக கூட்டணியில் அதற்கு அடுத்தபடியாக அதிக இடங்களில்  போட்டியிட்டது காங்கிரஸ் கட்சி தான். காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள்  ஒதுக்கப்பட்ட நிலையில், 18 தொகுதிகளில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி காங்கிரசார் மத்தியில்  உற்சாகத்தை தந்துள்ளது.   திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற்று திமுக சட்டமன்ற கட்சி தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், 18 எம்எல்ஏக்களை பெற்றுள்ள காங்கிரஸ் கட்சியில் சட்டமன்ற தலைவரை தேர்வு செய்யப்பட வேண்டியுள்ளது. இதற்காக காங்கிரஸ் சார்பில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் விரைவில் நடைபெறும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார்.

 அதன்படி, இக்கூட்டம் வரும் 7ம்தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடைபெறுகிறது. தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் நடைபெறும் இக்கூட்டம், அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சஞ்ஜய் தத், டாக்டர் சிரிவெல்ல பிரசாத் ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.  இக்கூட்டத்தில் புதிதாக தேர்வு செய்யப்பட்ட சட்டமன்ற காங்கிரஸ் உறுப்பினர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் தேர்வு செய்யப்படுகிறார்.

Related Stories:

>