×

திருச்சி கார் கம்பெனியில் பயங்கர தீ விபத்து: ரூ.1.50 கோடி மதிப்பிலான பொருட்கள் நாசம்

திருச்சி: திருச்சி பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே கார் பிட்டிங் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இதில் புதிய மற்றும் பழைய கார்களுக்கு தேவையான பொருட்கள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த கம்பெனியின் பெயர் பலகையில் ஒரு கார் தொங்குவது போன்று அமைக்கப்பட்டிருக்கும். இந்த கம்பெனிக்கு பக்கத்தில் சண்முகம் என்பவருக்கு சொந்தமான சந்தோஷ் ஆட்டோமொபைல் நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்திற்கு அடுத்து ஜெகராஜுக்கு சொந்தமான பேக்கரி செயல்பட்டு வருகிறது. கார்பிட்டிங் கம்பெனியின் உரிமையாளர் லியோ கான்பிஸ்ட் நேற்று வழக்கம்போல் இரவு 9 மணிக்கு வேலை முடித்து கம்பெனியை பூட்டி சென்றார்.

இன்று காலை 6 மணிக்கு பேக்கரியில் வேலை பார்க்கும் ஊழியர்கள் கடையை திறந்துள்ளனர். அப்போது, கார் பிட்டிங் கம்பெனியின் பெயர் பலகையில் உள்ளே இருந்து புகை வந்துள்ளது. பின்னர், பேக்கரி ஊழியர்கள் அருகே சென்று பார்த்தபோது கம்பெனிக்குள் தீ கொழுந்துவிட்டு எரிந்துள்ளது. இதையடுத்து ஊழியர்கள் கன்டோன்மென்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற தீயைணப்புத்துறை மாவட்ட அலுவலர் அனுசியா மற்றும் நிலைய அலுவலர் மில்கியூராஜா உள்ளிட்ட தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இருப்பினும் தீ கொழுந்து விட்டு எரிந்தது.

பின்னர் 3 முழு லாரி தண்ணீரை பீய்ச்சி அடித்து 4 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதுகுறித்து உரிமையாளர் லியோனி கான்பிஸ்ட் கண்டோண்மெண்ட் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கோசலைராமன் நடத்திய முதல்கட்ட விசாரணையில் கார்பிட்டிங் நிறுவனத்தில் இரவில் குறைந்தழுத்த மின்சாரம் ஏற்பட்டு விபத்து நடந்ததாகவும், இதில் சுமார் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்ததாகவும், பேக்கரியின் பின்பகுதி எரிந்து ரூ.23 லட்சம் மதிப்பிலான பொருட்களும், சண்முகத்திற்கு ரூ.25 லட்சம் மதிப்பிலான பொருட்களும் சேதம் எனவும் தெரியவந்தது. இது பற்றி போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Trichy , 1.50 crore worth of goods damaged in Trichy car company fire
× RELATED திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக செயல் வீரர்கள் கூட்டம்