×

இது கடினமான காலம்; ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல..! மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுவீச்சில் ஈடுபடவேண்டும்: மு.க.ஸ்டாலின் அறிக்கை

சென்னை: உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார். அறிக்கையில் அவர் கூறியதாவது;  கொரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலை மிக மோசமானதாக இருக்கிறது. நோய்ப் பரவலைத் தடுப்பது, நோயால் பாதிக்கப்பட்டவர்களை முழுமையாக நலப்படுத்துவது ஆகிய இரண்டு நோக்கங்களைக் கொண்டு தமிழக அரசு செயல்பட்டு வருகிறது. நோய்ப் பரவலைத் தடுப்பதற்கு புதிய கட்டுப்பாடுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. நாளை முதல் அவை செயல்பாட்டுக்கு வருகிறது. வைரஸ் தாக்கியவர்களைக் காக்கும் பணியில் மருத்துவர்கள் தங்களை ஒப்படைத்துக் கொண்டுள்ளார்கள். ‘மருத்துவ அவசர நிலை’ என்று சொல்லக் கூடிய அளவுக்கு இந்நோயின் தீவிரம் இருப்பதால் அவசரமாக ‘கட்டளை மையம்’ ஒன்றை உடனடியாகத் திறக்க வேண்டும் என்று தலைமைச் செயலாளரிடம் கூறியுள்ளேன்.

ஆக்சிஜன் தேவை, அதன் இருப்பு, படுக்கைகளின் தேவை, தடுப்பூசி இருப்பு - தேவை ஆகியவற்றைத் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களும் தெரிந்து - ஒருங்கிணைந்து செயல்பட இந்தக் கட்டளை மையம் உதவியாக இருக்கும். எந்த இடத்தில் இருப்பு உள்ளது - எந்த இடத்துக்கு அதிகமாகத் தேவை என்ற இரண்டு தகவல்களையும் ஒருங்கிணைக்கும் மையமாக இது இருக்கும். குறிப்பாக, ஆக்சிஜன் இருப்பு தகவல்கள் தான் இதில் முக்கியமானதாக இருக்கும். இந்தத் தகவல்கள் வெளிப்படைத் தன்மை கொண்டதாக அமைய வேண்டும் என்றும் அறிவுறுத்தியிருக்கிறேன். மாவட்ட அளவிலும் மாநில அளவிலுமான மையமாக இவை இருந்து செயல்படும். போர்க்காலத்தில் செயல்படுவதைப் போல நம்முடைய மருத்துவர்கள் செயல்பட்டு மக்கள் சேவையாற்றுவார்கள். நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உரிய, முறையான சிகிச்சையை அரசு மருத்துவமனைகள் அளித்து வருகின்றன.

குறிப்பாக மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்கள், முன்களப் பணியாளர்கள் ஆகியோரின் பங்களிப்பு மாபெரும் மக்கள் சேவையாக மாறிவிட்டது. அரசு மருத்துவமனைகளைப் போலத் தனியார் மருத்துவமனைகளிலும் பெரும்பாலும் கொரோனா நோயாளிகள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். போர்க்காலங்களில் செயல்படுவதைப் போலத் தனியார் மருத்துவமனைகளும் மருத்துவர்களும் செவிலியர்களும் செயல்பட்டு வருகிறார்கள். கொரோனா பரவல் அதிகமாவதும், ஆக்சிஜன் தேவை கூடுதலாக ஆகிக் கொண்டு போவதுமான சூழலை எதிர்கொள்ள அரசு மருத்துவமனைகளோடு சேர்ந்து தனியார் மருத்துவமனைகளும் துரிதமாகச் செயல்பட்டாக வேண்டும்.

தனியார் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு 50 விழுக்காடு படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என்று அரசு சார்பில் உத்தரவு போடப்பட்டு இருந்தது. இதனை ஏற்றுத் தனியார் மருத்துவமனைகள் 50 விழுக்காடு படுக்கைகளை ஒதுக்கீடு செய்து வருகிறார்கள். இது மருத்துவ அவசர நிலைக்காலமாக மாறிவிட்டது. உயிர் பயத்தோடு இருக்கும் மக்களைக் காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் தங்களை முழுமையாக ஒப்படைக்க வேண்டும் என்றும் வேண்டிக் கொள்கிறேன்.எனவே, தனியார் மருத்துவமனைகள், 50 விழுக்காடு படுக்கைகளைத் தாண்டியும் கூடுதலாகவும் படுக்கைகளை ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும், அவற்றை உயிர்ப் பாதுகாப்புக்கு அவசியமற்ற அறுவை சிகிச்சைகளுக்கு ஒதுக்காமல், கொரோனா சிகிச்சைக்காக ஒதுக்க வேண்டும் என்றும் அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.  

ஏனென்றால், தேவைகள் அதிகமாகி வருவதால், அதற்கு ஏற்ப தனியார் மருத்துவமனைகள் செயல்பட வேண்டும். தங்களிடம் உள்ள படுக்கைகளின் எண்ணிக்கை, அதில் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள் எண்ணிக்கை ஆகியவற்றைத் தனியார் மருத்துவமனைகள் தங்கள் இணையதளத்தில் வெளியிட்டால் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அதேபோல், கட்டணத்திலும் முடிந்தளவு சலுகை காட்டுமாறும் கேட்டுக் கொள்கிறேன். ஏழை – எளிய மக்களுக்கு மிகுந்த கருணைக் காட்டி அவர்கள் உயிரைச் செலவில்லாமல் மீட்டுத் தர வேண்டும். இது கடினமான காலம்; ஆனால் கடக்க முடியாத காலம் அல்ல! நாம் அனைவரும் ஒன்றிணைந்து விழிப்புடன் செயல்பட்டால் நம் உயிரைக் காப்பாற்றி எதிர்காலத்தை மகிழ்ச்சியுடன் வடிவமைக்க முடியும். உங்கள் ஒவ்வொருவர் உயிரும் உன்னதமானது என்பதும், கவனக் குறைவால் அதனை வீசியெறிந்திடக் கூடாது என்பதுமே எங்களது முதன்மையான குறிக்கோளாகும்.

Tags : BC ,Q. ,Stalin , This is a difficult time; But not an insurmountable time ..! Private hospitals must be fully involved in protecting the population: MK Stalin's statement
× RELATED இந்த தேர்தல் மூலம் யார் சரியானவர்,...