அதிகரிக்கும் கொரோனா கட்டுப்பாடுகள்: நாளை முதல் சென்னை புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை..! தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: நாளை முதல் கட்டுப்பாடு அதிகரிக்கப்படுவதால் புறநகர் ரயில் பயணிகளுக்கு புதிய கட்டுப்பாடு அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசிய பணியாளர்கள், ரயில்வே ஊழியர்கள் மட்டுமே ரயிலில் செல்லலாம்.  மேலும் காவல்துறையினர், மாநகராட்சி ஊழியர்கள், சுகாதாரத்துறை, தூய்மை பணியாளர்கள் ரயிலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது.

தினசரி பாதிப்பு எண்ணிக்கை 21 ஆயிரத்தைக் கடந்துள்ளது. உயிரிழப்பும் 300ஐ நெருங்கி கொண்டிருக்கிறது. மேற்கொண்டு பாதிப்பைக் கட்டுப்படுத்த மே 6ஆம் தேதி முதல் மே 20ஆம் தேதி வரை புதிய கட்டுப்பாடுகளைத் தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. அவற்றில் மளிகை மற்றும் பலசரக்கு கடைகள் மதியம் 12 வரை மட்டுமே அனுமதி, இறைச்சி கடைகள் சனி, ஞாயிறு விடுமுறை. மற்ற நாட்களில் காலை 6- நண்பகல் 12 மணி மட்டுமே செயல்பட அனுமதி, ரயில், மெட்ரொ, தனியார் பேருந்து, அரசு பேருந்துகளில் 50% மட்டுமே பொதுமக்கள் அமர்ந்து பயணிக்க அனுமதி உள்ளிட்ட கட்டுப்பாடுகள் முக்கியமானதாகப் பார்க்கப்பட்டன.

இச்சூழலில் தெற்கு ரயில்வே முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. தமிழ்நாட்டில் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலாகவிருப்பதால் புறநகர் ரயில்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என அறிவித்திருக்கிறது. அத்தியாவசிய பணிகளுக்காகச் செல்பவர்கள், மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட ஊழியர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் செங்கல்பட்டு-சென்னை கடற்கரை, சென்னை கடற்கரை-கும்மிடிப்பூண்டி ஆகிய மார்க்கங்களின் வழியாகச் செல்லும் ரயில்கள் குறைந்த அளவில் இயக்கப்படும்.

Related Stories:

>