×

குமரியில் 30 சதவீதமாக குறைந்த வெளிநாட்டு இனங்கள்: 10 ஆண்டுகளில் 2 ஆயிரம் பறவைகள் வேட்டை

நாகர்கோவில்: குமரியில் வேட்டை காரணமாக வெளிநாட்டு பறவைகள் வருகை 30 சதவீதமாக குறைந்துள்ளது. குமரி மாவட்டம் ஆண்டு தோறும் இரு பருவமழைகள் பெறும் மாவட்டம் என்பதுடன், 5 வகை நிலங்கள் இரு கடற்கரைகள் கொண்ட மாவட்டம் ஆகும். தடுக்கி விழுந்தால் நீர் நிலைகள் காணப்படுவதால், எப்போதும் பசுமையாக காணப்படுகிறது. மணக்குடி காயல் பகுதியில் நன்னீர்புலமாக உள்ளதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு பறவை இனங்களின் சொர்க்கபுரியாக திகழ்கிறது. இவ்வாறு பறவைகள் வரும் காரணத்தால், அவை இடும் எச்சங்கள் சிறந்த உரமாகவும், செடிகள் இடையே அமர்வதால், மகரந்த சேர்க்கைக்கு உதவியாகவும் இருந்தன. மேலும் பயிர்களை பதம் பார்க்கும் புழு பூச்சிகளை உணவாக உட்கொள்வதால்,  விவசாயிகளின் உற்ற நண்பனாக பறவைகள் திகழ்கின்றன. ஆனால், கடந்த 30 ஆண்டுகளில் சுமார் 5 ஆயிரத்திற்கும் அதிகமான சிறிய குளங்கள் ஆக்கிரமிப்பால் காணாமல் போய்விட்டன. மீன் வளர்ப்பவர்கள், மற்றும் தாமரை வளர்ப்பவர்களாலும், வேட்டையாடுபவர்களாலும் பறவைகள் வேட்டையாடப்பட்டன.

இதன் காரணமாக பறவைகள், நீர் நிலைகள், விவசாயம் ஆகியவற்றை பாதுகாக்கும் வகையில், குமரி இயற்கையின் நண்பர்கள் அமைப்பு சார்பில், பறவைகள் சரணாலயம் அமைக்க கோரிக்கை விடப்பட்டது. இதனையடுத்து ஆய்வு மேற்கொண்ட அதிகாரிகள் குழுவும் சரணாலயம் அமைக்க பரிந்துரை செய்தது. இதன் காரணமாக தத்தையார் குளம், தேரூர் குளம் முதல் மணக்குடி காயல் வரை பாதுகாக்கப்பட்ட பறவைகள் சரணாலயமாக தமிழக அரசு கடந்த 8 ஆண்டுகள் முன்பே அறிவித்தது. இதன்படி இங்கு வேட்டையாடுதல் தடை மற்றும் குளங்களில் எப்போதும் நீர் இருப்பு உறுதி செய்தல், பறவைகள் வாழத்தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் உள்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. மாணவர்கள், பொதுமக்கள் பறவைகளை கண்டு களிக்க காட்சி கோபுரங்கள் தமிழக வனத்துறை சார்பில் அமைக்கப்பட்டன. ஆனால், தற்போது உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறி குளங்களில் தாமரை வளர்க்கப்படுகின்றன. இதற்காக ரசாயன உரங்கள் போடப்படுவதுடன், அதிகாலையில் இக்கும்பல் குளங்களில் தாமரை இலைகளில் வசிக்கும் பறவைகளை பரிசல்களில் சென்று வேட்டையாடி வருகின்றன.

மேலும், நெல்மணிகளை பூச்சி மருந்தில் ஊறவைத்து போட்டு அவற்றை கொல்வது போன்ற சம்பவங்கள் தற்போது அதிகரித்து வருகின்றன. இதன் காரணமாக துருவ பகுதிகள் உள்பட உலகின் பல பகுதிகளில் இருந்து குமரி வரும் பறவைகள் எண்ணிக்கை படிப்படியாக குறைந்துள்ளது. இதனை கண்காணித்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டிய வனத்துறை அதிகாரிகள் ஏனோ இதனை கண்டு கொள்ளவில்லை. இதிலும் கொரோனா  பரவலுக்கு பின்னர் வனத்துறை அதிகாரிகள் சுத்தமாக இதனை கண்டு கொள்ளாமல் உள்ளனர். இதுபோல் காட்சி கோபுரங்களும் வெறும் காட்சி பொருளாக சமூக விரோத செயல்களின் கூடாரமாக உள்ளன. எனவே வனத்துறை அதிகாரிகள் அனைத்து பகுதிகளையும் ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் ஸ்ரீராம் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அனுப்பியுள்ளார். அந்த மனுவில், குமரியில் 10 ஆண்டுகளில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டு பறவைகள் வேட்டையாடி கொல்லப்பட்டுள்ளன. இதனால், கடந்த 4 ஆண்டுகளில் படிப்படியாக வெளிநாட்டு பறவைகள் வருகை 30 சதவீதமாக குறைந்துள்ளதாக கூறியுள்ளார்.

உள்ளாட்சி அமைப்புகளே விதிகளை மீறுகின்றன
இதுபற்றி நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் ஸ்ரீராம் கூறியதாவது: குமரியில் 1962ல் 3,500 குளங்கள் இருந்தன. 1998ல்இது 2,447 ஆக குறைந்தது. தற்போது மேலும்  பல குளங்கள் அழிவை சந்தித்துள்ளன. தற்போது தாமரை வளர்ப்பவர்கள் மற்றும் மீன் வளர்ப்பவர்கள் குளங்களில் இறைச்சிக் கழிவுகள் மற்றும் ரசாயன உரத்தை போடுவதால், பறவைகள் இறக்கின்றன. மேலும் பறவைகள் வேட்டையும் நடைபெறுகிறது. விவசாயத்தின் நண்பனான வெளிநாட்டு பறவைகளை பாதுகாக்க வேண்டிய உள்ளாட்சி அமைப்புகளே தாழக்குடி, இறச்சகுளம், புத்தேரி, தேரூர், பறக்கை, சுசீந்திரம் உள்பட பல பகுதிகளில் குப்பைகளை கொட்டி தீ வைக்கின்றனர். இதனாலும் பறவைகள் வரத்து குறைந்துள்ளது என்றார்.

Tags : Kumar , Exotic species less than 30 percent in Kumari: 2,000 birds hunted in 10 years
× RELATED கேரளாவில் எதிர்க்கட்சியினர்...