நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழை நிரம்பி வழியும் சோத்துப்பாறை அணை: வராக நதிக்கரையோர மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை

பெரியகுளம்:நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தொடர்மழையால், பெரியகுளம் அருகே உள்ள சோத்துப்பாறை அணை நிரம்பி வழிகிறது. இதனால், வராக நதிக்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம், பெரியகுளத்திலிருந்து 9 கி.மீ தொலைவில் 126.28 அடி உயரமுள்ள சோத்தப்பாறை அணை உள்ளது. இந்த அணையில் கடந்த 3 ஆண்டுகளாக கோடைகாலங்களில் நீர்மட்டம் குறைந்து, பொதுமக்களின் குடிநீருக்கே பற்றாக்குறை ஏற்பட்டது. ஆனால், இந்தாண்டு கோடை காலம் தொடங்கியது முதல், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை பகுதிகளில் பெய்த கோடைமழையால், அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்தது.

கடந்த இரண்டு நாட்களாக அணையின் மேற்பகுதியில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்த கனமழையால், நீர்வரத்து அதிகரித்து, அணை தனது முழு கொள்ளளவை நேற்று காலை எட்டியது. இதையடுத்து அணைக்கு வரும் 35 கனஅடி நீர், அப்படியே வெளியேற்றப்படுகிறது. அணையிலிருந்து வெளியேறும் நீர் வராக நதி வழியாக செல்வதால் வடுகபட்டி, மேல்மங்கலம், ஜெயமங்கலம் கிராமங்களில் ஆற்றின் கரையோரம் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் பாதுகாப்பான இடத்திற்கு செல்லுமாறு பொதுப்பணித்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. இந்தாண்டு கோடை காலத்தில் அணை நிரம்பி வழிவதால், பெரியகுளம் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories:

>