×

ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் யாரும் உயிரிழக்கவில்லை!: மாவட்ட ஆட்சியர் விளக்கம்

செங்கல்பட்டு: ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் யாரும் உயிரிழக்கவில்லை என்று மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார்.  தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் தினசரி 1500க்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட வண்ணம் உள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் அடுத்தடுத்து 11 நோயாளிகள் உயிரிழந்தனர். மேலும் பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இதனையடுத்து சென்னையில் இருந்து லாரிகள் மூலம் ஆக்சிஜன் கொண்டுவரப்பட்டு சேமிப்பு கிடங்குகளில் சேமிக்கப்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து அங்கு விரைந்த மாவட்ட ஆட்சியர் ஜான் லூயிஸ், மருத்துவமனைகளில் ஆய்வு மேற்கொண்டு விவரங்களை கேட்டறிந்தார். இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், ஆக்சிஜன் தட்டுப்பாடு காரணமாக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் யாரும் உயிரிழக்கவில்லை என்று விளக்கம் அளித்துள்ளார். 

ஆக்சிஜன் விநியோகத்தில் இருந்த கோளாறு சரி செய்யப்பட்டுள்ளது. கொரோனா முதல் அலையை விட 2ம் அலையில் பாதிப்பு 5 மடங்கு அதிகமாக உள்ளது. உயிரிழந்த 13 நோயாளிகளில் ஒருவர் மட்டுமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார். உயிரிழந்த மற்ற 12 நோயாளிகளுக்கு இணை நோய்கள், வயது மூப்பு உள்ளிட்ட பிரச்சனைகள் இருந்தன என்று தெரிவித்துள்ளார். 

தொடர்ந்து பேசிய அவர், தேவையான ஆக்சிஜன் மருத்துவமனையில் கையிருப்பு இருப்பதாகவும், மேலும் ஆக்சிஜன் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முடிக்கிவிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். எனினும் அடுத்தடுத்து பலர் உயிரிழந்ததற்கான காரணம் குறித்து உரிய விசாரணை நடைபெற்று வருவதாக ஆட்சியர் விளக்கம் அளித்தார். 



Tags : Sedalpu Government Hospital , Oxygen shortage, Chengalpattu Government Hospital, District Collector
× RELATED எரிந்த நிலையில் பெண் சடலம்: கொலையா என விசாரணை