அம்மா உணவக பெயர் பலகை அகற்றம்: திமுகவினர் 2 பேர் அதிரடி நீக்கம்: மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ தகவல்

சென்னை: அம்மா உணவக பெயர் பலகையை அகற்றியதாக திமுகவினர் 2 பேர் அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டனர். சென்னை முகப்பேரில் அம்மா உணவகம் முன்பு இருந்த பெயர் பலகையை திமுகவினர் 2 பேர் அகற்றினர். இது சமூக வலைதளங்களில் வெளியானது. இதுகுறித்து, சென்னை தெற்கு மாவட்ட திமுக செயலாளர் மா.சுப்பிரமணியன் எம்எல்ஏ  நிருபர்களிடம் கூறியதாவது: முகப்பேர் கிழக்கு 10வது பிளாக்கில் உள்ள அம்மா உணவகத்தில் ஒட்டப்பட்டிருந்த பெயர் பட்டியல் மற்றும் பெயர் பலகைகளை இருவர் பெயர்த்து எடுத்து கீழே போடுவதைப் போன்ற காட்சிகள் சமூக வலை தளங்களில் வெளியானது.  

இதுகுறித்து திமுக தலைவர் கவனத்திற்கும் சென்றது. இது தவறான அணுகுமுறை, யார் இந்த தவறை செய்திருந்தாலும் விசாரித்து நடவடிக்கை எடுக்க  வலியுறுத்தினார். விசாரித்ததில், தி.மு.க உறுப்பினர்களான நவசுந்தர் மற்றும் சுரேந்தர்  ஆகிய இருவரும் இச்செயலை செய்திருக்கிறார்கள். அவர்கள் எந்த பொறுப்பிலும் இல்லாதவர்கள். உடனடியாக பகுதிச் செயலாளர் நொளம்பூர் ராஜனை தொடர்பு கொண்டு, சுவரிலிருந்து பெயர்த்து எடுக்கப்பட்ட அம்மா உணவகத்தின் பெயர்  பட்டியல் மற்றும் பெயர் பலகைகளை அதே இடத்தில் ஒட்ட சொன்னோம். தலைவர் உத்தரவுப்படி, பெயர்ப் பலகைகள் இருந்த இடத்திலேயே ஒட்டப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அப்பகுதியில் அமைந்திருக்கிற காவல்நிலையத்திலும் புகார் மனு  அளிக்கப்பட்டுள்ளது. இருவரும் தற்போது கைது செய்யப்பட்டு, 294 பி, 427, 448 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கட்சியின் அடிப்படை உறுப்பினரிலிருந்தும் அவர்கள் இருவரும் நீக்கப்பட்டுள்ளளனர்.

திமுக தலைவர், கலைஞர் நினைவிடத்தில் நிருபர்களிடம் கூறும்போது, \”எங்களுக்கு வாக்களித்தவர்கள் மகிழ்ச்சியடையக்கூடிய வகையிலும், வாக்களிக்க தவறியவர்கள் ஏன் இவர்களுக்கு நாம் வாக்களிக்கத் தவறிவிட்டோம் என்று மனம்  வருந்துகிற வகையிலும் எங்களுடைய ஆட்சி அமையும்’’ என்று எடுத்துக் கூறினார். அந்த வகையிலேதான், இந்த தவறைச் செய்தவர்கள் யாராக இருந்தாலும், சொந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் மீது சட்ட ரீதியான  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தி.மு.க. ஆட்சி தொடங்குவதற்கு முன்னரே, இந்த ஆட்சி  குறிப்பாக, தலைவர் எந்த வகையில் இந்த ஆட்சியை நடத்திச்செல்ல இருக்கிறார் என்பதற்கு ஒரு சிறந்த உதாரணமாக இருந்து கொண்டிருக்கிறது.

சென்னையில் மெரினா கடற்கரை  உலகத்தரத்திற்கு அழகுப்படுத்தப்பட்டு, கலாச்சார சின்னங்கள் சிற்பங்களாக வடிக்கப்பட்டு கல்வெட்டுகள் வைக்கப்பட்டன. கலைஞரால் திறக்கப்பட்ட, மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகளில் கல்வெட்டுகள்  இருந்தன. 2011ல் அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன், அதிமுகவினர் அனைத்துக் கல்வெட்டுகளையும் அடித்து நொறுக்கினர். 10 ஆண்டுகள் ஆகியும்கூட,  எந்த மாநகராட்சி நிர்வாகமும், அந்த கல்வெட்டுகளை மீண்டும் அங்கே பொறுத்துவதற்கு  முன்வரவில்லை.

இப்போதும் கூட சைதாப்பேட்டையில் உள்ள பவளவண்ணன் சுரங்கப்பாதை,  பஜார் சாலை சுரங்கப்பாதை, ஆபிரகாம் மேம்பாலம், மெரினா கடற்கரை மற்றும் சேத்துப்பட்டில் இருக்கிற ஒரு சிற்பம் போன்ற பல்வேறு இடங்களில் உடைக்கப்பட்ட  கல்வெட்டுகள் சாட்சிகளாய் இருந்து கொண்டிருக்கிறது. ஆனால் தி.மு.கவை பொறுத்தவரை, அப்படிப்பட்ட அந்த செயல்களுக்கெல்லாம் துணை போகாது.இவ்வாறு மா.சுப்பிரமணியன் கூறினார்.

Related Stories:

>