×

400 எக்ஸ்‌ரேக்களுக்கு சமமானது கொரோனாவை கண்டறிய சிடி ஸ்கேன் எடுப்பதால் கேன்சர் ஏற்படும் அபாயம்

புதுடெல்லி: லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தொற்றைக் கண்டறிய மருத்துவர்கள் ஆலோசனையின்றி சிடி ஸ்கேன் எடுப்பது புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை உருவாக்கும் என எய்ம்ஸ் இயக்குநர் ரன்தீப் குலேரியா  எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இந்தியாவில் 2ம் அலை கொரோனா நோய் தொற்று தீவிரமாக பரவி வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கொரோனா அறிகுறிகள் தென்பட்டவுடன் ஆர்டிபிசிஆர் பரிசோதனை  எடுக்கப்படுகிறது. ஆனால், இதில் குழப்பமான முடிவு ஏற்படும்பட்சத்தில் சிடி ஸ்கேன் செய்ய தனியார் மருத்துவமனைகள் அறிவுறுத்துகின்றன.

 கொரோனா தொற்று உறுதியாகிவிட்டால், ரத்தப் பரிசோதனை, சிடி ஸ்கேன் போன்றவை  எடுக்கப்படுகிறது. சிலருக்கு, லேசான கொரோனா அறிகுறி காணப்பட்டதும், மருத்துவரின் ஆலோசனையின்றி, தேவையில்லாமல் சிடி ஸ்கேன் எடுக்க தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குநர் டாக்டர் ரன்தீப் குலேரியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது: இதுவரை நடத்தப்பட்ட ஆய்வுகளில் 30 முதல் 40 சதவிகிதம் பேருக்கு அறிகுறிகளே இல்லாமல் கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. அதேநேரம், சிடி ஸ்கேன் எடுத்தும், சிலருக்கு சிகிச்சை அவசியம் இல்லாமல் போய் விடுகிறது.

லேசான அறிகுறி உள்ளவர்கள் நோய் தொற்றைக் கண்டறிய சிடி ஸ்கேன், ஸ்டீராய்டு மருந்துகளை உட்கொள்கின்றனர்.  சிடி ஸ்கேனுக்கும், லேசான அறிகுறி உள்ளவர்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. மருத்துவர் பரிந்துரைத்தால் மட்டுமே  சிடி ஸ்கேன் எடுக்க வேண்டும்.ஒருமுறை சிடி ஸ்கேன் எடுப்பது 300 முதல் 400 முறை மார்பக எக்ஸ்ரே எடுப்பதற்கு சமம். இது எதிர்காலத்தில் புற்றுநோய் ஏற்படுவதற்கு வழிவகுக்கும். எனவே, லேசான கொரோனா அறிகுறி உள்ளவர்கள் சிடி ஸ்கேன் எடுப்பது  தேவையற்றது  
அதே போல, தொற்றின் ஆரம்ப கட்டத்திலேயே ஸ்டீராய்டு மருந்துகளை பயன்படுத்த கூடாது.

 இதனால், மறைமுகமாக கொரோனாவுக்கு கூடுதல் வலிமை அளிக்கிறோம். ஏனெனில், லேசான அறிகுறி உள்ள பல நோயாளிகள், பின்னர் தொற்று  பாதிப்பு அதிகமாகி நிமோனியா ஏற்படுவதாக கூறுகின்றனர். தொற்று தீவிரமாக இருக்கும்போதுதான் ஸ்டீராய்டு மருந்துகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதுவும் ஆக்சிஜன் சிகிச்சை உள்ளிட்ட பல கட்ட சிகிச்சைகளுக்கு பிறகுதான் ஸ்டீராய்டு  மருந்து கொடுக்கப்படும்.  இவ்வாறு அவர் கூறினார்.

2 கோடியை கடந்தது

நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்துக்கான கொரோனா பாதிப்பு, பலி விவரங்கள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு: நேற்று ஒரேநாளில் 3 லட்சத்து 57 ஆயிரத்து 229 பேர் தொற்றினால் பாதிப்புக்கு உள்ளானதை தொடர்ந்து, மொத்தம் பாதித்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 2 லட்சத்து 82 ஆயிரத்து 833 ஆக அதிகரித்துள்ளது.

˜ கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 3,499 பேர் வைரசுக்கு பலியாகினர். இதனால் பலியானோரின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 22 ஆயிரத்து 408 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 34 லட்சத்து 47 ஆயிரத்து 133 ஆக இருக்கிறது. இது மொத்தம் பாதித்தோரில் 17 சதவீதமாகும். தொற்றில் இருந்து குணமடைந்தோரின் எண்ணிக்கை 1 கோடியே 66 லட்சத்து 13 ஆயிரத்து 292 ஆக உள்ளது. குணமடைந்தோர் விகிதம் 81.91, இறப்பு விகிதம் 1.10 சதவீதமாக பதிவாகி உள்ளது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

15.89 கோடி தடுப்பூசி

நேற்று முன்தின நிலவரப்படி,  நாடு முழுவதும் 17 லட்சத்து 8 ஆயிரத்து 390 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, இதுவரை தடுப்பூசி போட்டு கொண்டவர்களின் எண்ணிக்கை 15.89 கோடியை கடந்தது. நாடு முழுவதிலும்  உள்ள 12 மாநிலங்களை சேர்ந்த 18-44 வயதுக்குட்பட்ட  4 லட்சத்து 6 ஆயிரத்து 339 பேர் முதல் சுற்று தடுப்பூசி போட்டு கொண்டுள்ளதாக, சுகாதாரத்துறை அமைசக்கம் தெரிவித்துள்ளது.

ரெம்டெசிவிர் உற்பத்தி

1.5 கோடியாக அதிகரிப்பு
மத்திய ரசாயனத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறுகையில், `` ரெம்டெசிவிர் தேவை அதிகரித்து வருவதால், மத்திய அரசு எடுத்த நடவடிக்கையின் மூலம், உற்பத்தி 3 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. மாதத்துக்கு 1.05 கோடி  ரெம்டெசிவிர் குப்பிகள் தயாரிக்கப்படும்’’ என்றார்.

10 மாநிலங்களில் மட்டும் 71% நாட்டின் மொத்த பாதிப்பில் மகாராஷ்டிரா, கர்நாடகா, உபி., ஆந்திரா, கேரளா, மேற்கு வங்கம், ராஜஸ்தான், சட்டீஸ்கர், குஜராத், தமிழ்நாடு ஆகிய 10 மாநிலங்களை சேர்ந்தவர்கள் 71 சதவீதம்.

வேலை நேர மாற்றம்

ஊழியர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் பணிக்கு வருவதை தவிர்க்க 50 சதவீதத்தினர் ஒருநாளும், மீதமுள்ளவர்கள் மறுநாள் என வர சொல்லி,  அனைத்து அரசு துறைகளுக்கும் மத்திய அரசு உத்தரவு.

7 ஆக்சிஜன்  டேங்கர்கள்

மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட டிவிட்டரில், ``ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து 20 மெட்ரிக் டன் எடை கொண்ட 7 டேங்கர்களில் அனுப்பிய மருத்துவ ஆக்சிஜன் குஜராத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்தை வந்தடைந்தன.  யுஏஇ.யின் ஆதரவுக்கு நன்றி,’’ என்று கூறியுள்ளது.



Tags : Risk of cancer from taking a CT scan to detect corona is equivalent to 400 x-rays
× RELATED உத்தரகாண்டில் லேசான நிலநடுக்கம்