புதுவை சட்டத்தை திருத்துகிறது மத்திய அரசு நமச்சிவாயத்துக்கு துணை முதல்வர் பதவி: அமைச்சர்கள் பட்டியல் தயாராகிறது

புதுச்சேரி: புதுச்சேரி யில் 4வது முறை முதல்வராக பதவியேற்கும் ரங்கசாமி தலைமையிலான புதிய அமைச்சரவை பட்டியல் தயார் செய்யும் பணியில் தேஜ கூட்டணி தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதனிடையே முன்னாள் அமைச்சர்  நமச்சிவாயத்திற்கு துணை முதல்வர் பதவி வழங்கப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு வழிவகை செய்வதற்காக சட்டத்தை மத்திய அரசு திருத்துகிறது.  புதுச்சேரியில் நடந்து முடிந்த தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ் 10, கூட்டணி கட்சியான பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்றன. திமுக 6, காங்கிரஸ் 2 இடங்களை கைப்பற்றியது. இதையடுத்து தேஜ கூட்டணி கட்சி சார்பில் தனித்தனியாக  நடத்தப்பட்ட ஆலோசனை கூட்டத்தில் சட்டசபை தலைவராக ரங்கசாமி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

  அதன்பிறகு பாஜகவை சேர்ந்த எம்எல்ஏக்களும் கையெழுத்திட்டு, ஆட்சி அமைப்பதற்கு உரிமை கோரும் கடிதத்தை கவர்னர் தமிழிசையிடம் நேற்று முன்தினம் ரங்கசாமி வழங்கினார். இதனிடையே வருகிற 7ம் தேதி (வெள்ளி) பதவியேற்பு  விழா ஏற்பாடுகளை என்ஆர்.காங்கிரஸ் செய்து வரும் நிலையில், பாஜக தரப்பில் மே 9ம்தேதி (ஞாயிறு) பதவியேற்கலாம் என ரங்கசாமியிடம் அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தேதியை இறுதி செய்வதில் சிக்கல்  எழுந்துள்ளது. இருப்பினும் இந்த வார இறுதிக்குள் புதிய அமைச்சரவை பதவியேற்கக் கூடும் என்று கவர்னர் மாளிகை வட்டாரங்கள் உறுதிபட தெரிவிக்கின்றன.

புதிய அமைச்சரவையில் ரங்கசாமி முதல்வராகவும், நமச்சிவாயம் துணை  முதல்வராகவும் இருப்பார். மேலும், என்ஆர் காங்கிரசில் 2 பேரும், பாஜகவில் 2 பேரும் அமைச்சர்களாக பதவியேற்பார்கள் என தெரிகிறது.  அதன்பிறகு அடுத்த வாரத்தில் சட்டசபை கூடி தற்காலிக சபாநாயகர் மூலம் புதிய எம்எல்ஏக்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்கப்படும். அதைத் தொடர்ந்து புதிய சபாநாயகர், எம்எல்ஏக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முறைப்படி சபை  அலுவல்கள் நடைபெறும். என்ஆர்.காங்கிரசுடன் கூட்டணி அமைச்சரவையில் பாஜக பங்கேற்பதால் எதிர்க்கட்சி அந்தஸ்து திமுகவுக்கு கிடைக்கும். இதனால் சட்டசபையில் 14 வருடங்களுக்குப்பின் திமுக மீண்டும் எதிர்க்கட்சி வரிசையில்  அமரும் நிலை ஏற்பட்டுள்ளது.  புதுச்சேரி யூனியன் பிரதேச சட்டப்படி துணை முதல்வர் என்ற பதவிக்கு இடமில்லை. எனவே, அதற்கு வழிவகை செய்வதற்காக மத்திய உள்துறை சட்டதிருத்தம் செய்ய இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Stories:

>