மம்தா பானர்ஜி பற்றி சர்ச்சை கருத்து: கங்கனாவின் டிவிட்டர் பக்கம் நிரந்தரமாக முடக்கம்

புதுடெல்லி: மேற்கு வங்க தேர்தல் முடிவுக்கு பிறகு, வன்முறையை தூண்டும் வகையில், சர்ச்சைக்குரிய டிவிட்களை நடிகை கங்கனா ரனவத் வெளியிட்டு வருவதாகக் கூறி அவரது ட்விட்டர் கணக்கு, நிரந்தரமாக முடக்கப்பட்டுள்ளது.  மேற்கு வங்கத்தில் உள்ள 294 தொகுதிகளில்  மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி 213 தொகுதிகளைப்  பிடித்து தனிப்பெரும்பான்மையுடன் மூன்றாவது முறையும் ஆட்சியை தக்கவைத்துக்  கொண்டது. பாஜக 77  இடங்களை மட்டும் பிடித்தது. இதையடுத்து அங்கு  பாஜகவினருக்கும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்களுக்கும் இடையே  ஏற்பட்ட வன்முறையில் நேற்று 5 பேர் கொல்லப்பட்டதாகவும் பாஜக அலுவலகத்திற்கு  தீ வைத்ததாகவும்  பாஜக தரப்பில் கூறப்படுகிறது.

இது குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் விமர்சித்த கங்கனா ரனாவத் ‘பாஜக வெற்றி பெற்ற  அசாம், புதுச்சேரி மாநிலங்களில் வன்முறை நிகழவில்லை. ஆனால், மம்தா ஜெயித்த மேற்கு  வங்கத்தில் வன்முறை நடக்கிறது. மேற்கு வங்கத்தில்  ஜனாதிபதி ஆட்சி  அமல்படுத்த வேண்டும். பிரதமர் மோடி மம்தா பானர்ஜியை ஒடுக்கவேண்டும்’ என்று  குறிப்பிட்டிருந்தார்.  சில நாட்களுக்கு முன் நடிகர் சோனு சூட், மோசடி பேர்வழி எனக் கூறி, அவரது நற்பணிகளை கங்கனா கடுமையாக விமர்சித்தார்.

 இந்நிலையில் ‘வெறுக்கத்தக்க நடத்தை மற்றும் தவறான நடத்தையால் டிவிட்டர் கொள்கையை கங்கனாவின்  கணக்கு மீண்டும் மீண்டும் மீறியுள்ளது. வன்முறையை தூண்டும் விதமாகவும் கருத்துகள் உள்ளன. இதற்கு எதிராக வலுவான நடவடிக்கை எடுக்கும் விதமாக அவரது டிவிட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்படுகிறது’ என டிவிட்டர் நிறுவனம்  தெரிவித்துள்ளது. இதற்கு முன் விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்தும் விதமாக கங்கனா கருத்துகளை தெரிவித்ததால் அவரது டிவிட்டர் கணக்கு தற்காலிகமாக முடக்கப்பட்டது. இப்போது மீண்டும் அவர் அதுபோல் சர்ச்சையில் சிக்கியிருப்பது  குறிப்பிடத்தக்கது.

Related Stories:

>