மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் அதிமுக தோல்வி: சேலத்தில் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

சேலம்: மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாததால் அதிமுக தோல்வியடைந்திருப்பதாக கருதுகிறோம் என்று  முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் சேலத்தில் கூறினார். சேலம் நெடுஞ்சாலைநகரில் உள்ள வீட்டில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நேற்று சந்தித்து பேசினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:  ஆட்சிக்கு தலைமை ஏற்று மக்களுக்கு சேவையாற்ற வேண்டும் என கருதினோம். ஆனால், தேர்தல் முடிவில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து சேவையாற்ற மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளார்கள்.

இதன்மூலம் மக்களின் எதிர்பார்ப்பை நாங்கள் இன்னும் பூர்த்தி செய்யவில்லை என்பதையும், அவர்களின் எதிர்பார்ப்பு இன்னும் அதிகளவு இருப்பதையும் அறிந்துகொண்டுள்ளோம். அதனால், அரசை வழிநடத்தும் வகையில் எதிர்க்கட்சியாக  செயலாற்றுவோம்.

தற்போது அதிமுகவிற்கு கிடைத்த வெற்றிக்கு காரணமாக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருந்துள்ளார். இத்தேர்தலில் 5 முனை போட்டியிருந்த போதிலும், 3 கட்சிகளை மக்கள் புறக்கணித்து உள்ளனர். திமுகவை  ஆளுங்கட்சியாகவும், அதிமுகவை வழிநடத்தும் கட்சியாகவும் தேர்வு செய்திருக்கிறார்கள்.

எதிர்க்கட்சி தலைவராக யாரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை கட்சியின் தலைமை முடிவு செய்யும். அதேபோல், அதிமுகவுடன், அமமுக இணைப்பு பற்றி கட்சியின் தொண்டரான நாங்கள் எதுவும் கூற முடியாது. தலைமையிடம்  கேளுங்கள். அவர்கள் முடிவெடுத்து  கூறுவார்கள்.   இவ்வாறு ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

Related Stories:

>