திருமங்கலத்தில் கொடூர சம்பவம்: காதலியை கொலை செய்து வீட்டுக்குள் புதைத்த வக்கீல்

* தூக்குப்போட்டு தானும் தற்கொலை

* 10 பக்க கடிதத்தில் பரபரப்பு தகவல்

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் ஆறுமுகம் வடக்குத் தெருவை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் (42). வக்கீல். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து ஏழு வயது மகளுடன் தனியாக வசித்து வந்தார். திருமங்கலம்  பசும்பொன் தெருவை சேர்ந்தவர் சித்ராதேவி (32). யோகா பயிற்சியாளர். கணவனை பிரிந்து வாழ்ந்த இவரிடம் அரிகிருஷ்ணனின் மகள், யோகா பயின்றுள்ளார். மகளை யோகா வகுப்பிற்கு அழைத்து சென்று வரும்போது சித்ராதேவிக்கும், அரிகிருஷ்ணனுக்கும் தொடர்பு ஏற்பட்டது. கடந்த ஏப். 2ம் தேதி திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் கிடைக்காததால் அவரது தந்தை கன்னையா  திருமங்கலம் டவுன் போலீசில் புகார் செய்தார்.

வக்கீல் அரிகிருஷ்ணனுக்கும், தனது மகளுக்கும் தொடர்பு இருப்பதாக கூறி அவரிடம் விசாரிக்கும்படி எஸ்பி, முதல்வரின் தனிப்பிரிவிற்கு தனித்தனியாக புகார்கள் கொடுத்தார். பின்னர் ஐகோர்ட்  மதுரை கிளையில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இந்நிலையில், திருமங்கலத்தில் உள்ள தனது வீட்டில் வக்கீல் அரிகிருஷ்ணன் தூக்கில் தொங்கி இறந்து கிடப்பதாக அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு நேற்று தகவல் கொடுத்தனர். போலீசார் சென்று அரிகிருஷ்ணன் உடலை மீட்டனர். வீட்டில்  சோதனை செய்தபோது, அவர் 10 பக்கங்களில் போலீசாருக்கு எழுதிய கடிதம் ஒன்றை கைப்பற்றினர்.

கடிதத்தில், சித்ராதேவியை தானே கொலை செய்து படுக்கையறை பாத்ரூமில் குழிதோண்டி புதைத்து சிமென்ட் பூசி இருப்பதாகவும், தனது தற்கொலைக்கு யாரும் காரணம் இல்லை எனவும், கொலை செய்த குற்றத்தை பொறுக்கமுடியாமல்  தனக்குத்தானே தண்டனை விதித்துக் கொள்வதாகவும் தெரிவித்திருந்தார். அவர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தபடியே படுக்கையறை பாத்ரூமில் புதிய சிமென்ட் பூச்சுப்பணி நடந்திருந்தது. டாக்டர்கள்  முன்னிலையில் சித்ராதேவியின் உடலை  இன்று தோண்டி எடுக்க அதிகாரிகள் முடிவெடுத்துள்ளனர். இச்சம்பவம் திருமங்கலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories:

>