×

அதிமுக எம்எல்ஏக்கள் எண்ணிக்கை பாதியானது 2 மூத்த அமைச்சர்கள் இருந்தும் ஈரோட்டை கோட்டை விட்டது ஏன்?

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளும் 2016 தேர்தலில் அதிமுக வசம் இருந்தன. ஆனால், இந்த தேர்தலில் அந்த வெற்றி 4 ஆக சுருங்கி உள்ளது. மாவட்டத்தில் மூத்த அமைச்சர்கள் செங்கோட்டையன்,  கருப்பணன் ஆகிய இருவர் இருந்தும் 4 தொகுதிகளை கோட்டை விட்டிருப்பது கட்சி தொண்டர்களிடமும், மேலிடத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து அதிமுக நிர்வாகிகள் தரப்பில் கூறியதாவது: அதிமுகவை பொருத்தவரை இந்த தேர்தலில் மேற்கு மண்டலத்தை நம்பித்தான் இருந்தோம். ஈரோடு மாவட்டத்தில் கூட்டணி கட்சிக்கு ஒரு தொகுதி மட்டுமே ஒதுக்கினோம். மீதமுள்ள  7 தொகுதிகளும் தமாகா உள்பட இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டதால் நிச்சயம் வெற்றி பெறுவோம் என எதிர்பார்த்திருந்தோம்.

மூத்த அமைச்சர் செங்கோட்டையன், மாவட்ட செயலாளர் மற்றும் அமைச்சருமான கருப்பணன் ஆகியோர் வெற்றி வியூகங்களை வகுத்து செயல்படுவார்கள் என நம்பினோம். ஆனால், அந்த நம்பிக்கை முற்றிலும் வீணாகிவிட்டது. தங்களுடைய  வெற்றியை தக்க வைக்க செலுத்திய கவனத்தை மற்ற தொகுதிகளில் செலுத்தவில்லை. குறிப்பாக, அமைச்சர் கருப்பணனின் நடவடிக்கை கட்சியினரிடம் அதிருப்தியைத்தான் ஏற்படுத்தியது. தேர்தல் பிரசாரம் தொடங்கிய நிலையில் அம்மாபேட்டை ஒன்றிய செயலாளரை கட்சியில் இருந்து நீக்கியது, ஈரோடு கிழக்கு, மேற்கு, அந்தியூர்  தொகுதிகளில் கவனம் செலுத்தாதது, நிர்வாகிகளை மதிக்காதது, வேண்டிய நபர்களுக்கு சீட் வாங்கிக்கொடுத்ததால் மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளானது என பல காரணங்களை கூற முடியும்.

அதே போல், பெருந்துறை தொகுதியில் வேட்பாளரை மாற்றிய விவகாரம் மற்ற தொகுதிகளிலும் எதிரொலித்தது. பெருந்துறை சுயேட்சை வேட்பாளர் தோப்பு வெங்கடாச்சலத்தை வீழ்த்த வேண்டும் என்பதில் மட்டுமே 2 அமைச்சர்களின்  கவனமும் இருந்தது. தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பாக அமைச்சர் செங்கோட்டையனின் நடவடிக்கையால் ஒன்றிய செயலாளர் கட்சியை விட்டு விலகி திமுகவில் ஐக்கியமானார்.

 மூத்த அமைச்சர் என்ற போதிலும் அவரது வெற்றியை மட்டுமே மனதில் வைத்து செயல்பட்டு வந்தார். அருகில் உள்ள கோவை மாவட்டத்தில் அத்தனை தொகுதியையும் அதிமுக தனது வசமாக்கி கொண்டது. அமைச்சர் வேலுமணி அருகில்  உள்ள நீலகிரி மாவட்டத்திலும் பணியாற்றி உள்ளார். ஆனால், செங்கோட்டையன், கருப்பணன் ஆகிய இருவரும் தங்களது தனிப்பட்ட மோதல், விருப்பம், வெறுப்புகளை மனதில் வைத்து செயல்பட்டதன் விளைவு 4 தொகுதிகளை பறி கொடுக்க  வேண்டியதாகிவிட்டது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


இருவரும் தங்களது தனிப்பட்ட மோதல், விருப்பம், வெறுப்புகளை மனதில் வைத்து செயல்பட்டதன் விளைவு 4 தொகுதிகளை பறி கொடுக்க வேண்டியதாகிவிட்டது.



Tags : Erota Castle , Half of the AIADMK MLAs and 2 senior ministers have left Erode fort.
× RELATED காங்கிரஸ் தேர்தல் அறிக்கை ஏப்.5-ல் வெளியீடு