மம்தா பானர்ஜியை கண்டித்து தமிழகம் முழுவதும் இன்று பாஜ ஆர்ப்பாட்டம்

சென்னை: மம்தா பானர்ஜியை கண்டித்து தமிழகம் முழுவதும் மண்டல வாரியாக இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்று எல்.முருகன் கூறியுள்ளார்.  தமிழக பாஜ தலைவர் எல்.முருகன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

 மேற்கு வங்காளத்தில் 2016 தேர்தலில் மூன்று இடங்களை மட்டும் பெற்ற பாஜ, இப்போது 77 இடங்களை பெற்றிருக்கிறது. மேலும் மம்தா பானர்ஜி போட்டியிட்ட நந்திகிராம் தொகுதியில் பாஜ வேட்பாளர் சுவேந்து அதிகாரியிடம் தோற்றுப்  போனார். இதனால் எரிச்சல் அடைந்துள்ள மம்தா பானர்ஜி, அவருடைய கட்சி குண்டர்களை வைத்து மேற்கு வங்காளத்தில் வன்முறை வெறியாட்டத்தை தொடங்கியிருக்கிறார்.

 இதுவரை பாஜ தொண்டர்கள் ஆறு பேர் பலியாகி இருக்கிறார்கள்.  நந்திகிராம் மாவட்ட பாஜ கட்சி அலுவலகம் திரிணாமுல் காங்கிரஸ் விஷமிகளால் தீ வைத்து கொளுத்தப்பட்டு இருக்கிறது. இந்த வன்முறை வெறியாட்டத்தை கண்டித்து இன்று கொல்கத்தாவில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜ  தேசிய தலைவர் ஜே.பி. நட்டா பங்கேற்க இருக்கிறார்.  அதேபோன்று நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது.தமிழ்நாட்டிலும் இன்று அனைத்து மாவட்டங்களிலும் மண்டல வாரியாக ஆர்ப்பாட்டம்  நடத்திட நிர்வாகிகளை கேட்டுக்கொள்கிறேன்.  இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories: